அவசர மருத்துவ வாகன அழைப்பு அதிகரிப்பு; சேவை காலதாமதம் ஆகலாம்

2 mins read
d101b861-b98e-43c4-b362-a23d4b6db3a6
டிசம்பர் முதல் வாரம் குடிமைத் தற்காப்புப் படையின் அவசர எண் 995க்கு கிட்டத்தட்ட 750 அழைப்புகள் வந்ததாகக் கூறப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அவசர மருத்துவ வாகன சேவை எண் 995க்கு அன்றாட அழைப்புகள் டிசம்பர் மாதம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அந்த சேவை வழங்குவதில் காலதாமதம் ஆகலாம் என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியுள்ளது.

அதிலும் குறிப்பாக கடுமையான மருத்துவ காரணம் இல்லாதபோது சேவை வழங்குவதில் தாமதம் ஏற்படலாம் என்று குடிமைத் தற்காப்புப் படை விளக்கியுள்ளது.

அது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் டிசம்பர் 7ஆம் தேதி பதிவில், டிசம்பர் முதல் வாரம் அன்றாடம் சராசரியாக 750 அழைப்புகள் வந்ததாகவும் இது ஜூலையிலிருந்து செப்டம்பர் மாதம் வரையிலான அழைப்புகளை விட கிட்டத்தட்ட 100 அழைப்புகள் அதிகம் என்றும் அது தெரிவித்தது.

அத்துடன், டிசம்பர் மாத அழைப்பு கொள்ளைநோய் கால அழைப்புகளை விட ஏறத்தாழ 200 அழைப்புகள் அதிகம் என்றும் அது கூறியது.

அதன் இணையத்தள பதிவின்படி, 2022ஆம் ஆண்டு குடிமைத் தற்காப்புப் படை, 256,837 அழைப்புகளைக் கையாண்டது என்றும் இந்த எண்ணிக்கை அன்றாடம் 704 அவசர அழைப்புகளுக்கு நிகர் என்றும் தெரிவித்தது.

இது 2021ஆம் ஆண்டின் அவசர அழைப்புகளை காட்டிலும் 20.2 விழுக்காடு அதிகம் என்றும் அது தெளிவுபடுத்தியது. இந்த அதிகரிப்பு பல்வேறு உருமாறிய கொவிட்-19 கொள்ளைநோய் கிருமிகள் தொடர்பில் இருக்கலாம் என்றும் அது கூறியது.

இதில் ஏறக்குறைய 5 விழுக்காடு அழைப்புகள் அவசரமற்ற அழைப்புகளாக இருந்தன என்றும் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

மேலும், 2017ஆம் ஆண்டு முதல் அவசர அழைப்புகளுக்காக மட்டுமே அவசர வாகன அழைப்பை கையாள்வது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்துள்ளதாகவும் குடிமைத் தற்காப்புப் படை விளக்கியது. .

ஆனால், அவசரமற்ற அழைப்புகள் 2021ஆம் ஆண்டில் இருந்த 9,050 என்ற எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு 11,538ஆக உயர்ந்தது என்று அது சொன்னது.

இந்த எண்ணிக்கை சொள்ளைநோய் காலத்துக்கு முன்னர் 2019ஆம் ஆண்டில் இருந்த 10,534 என்ற எண்ணிக்கையை விட அதிகம் என்றும் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

தற்போதைய அவசர அழைப்பு அதிகரிப்பை சமாளிக்க அதிக அளவில் மருத்துவ அவசர அழைப்புகள் உள்ள பகுதிகளுக்கு தனது வாகனங்களை மாற்றிவிடுவதாக குடிமைத் தற்காப்புப் படை அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்