கிரேப் வாடகை வாகனத்தை ஓட்டிவந்த திரு லியனர்ட் கோ, 46 நிறுவனங்களுக்கு நியமன இயக்குநராக செயல்பட்டாலும் அவற்றின் கணக்கு வழக்குகளை சரிவர கவனிக்கவில்லை.
கடந்த 2022ல் பிப்ரவரி மாதம் மெய்டன் சிங்கப்பூர் என்ற உற்பத்தி மற்றும் பொறியியல் நிறுவனம் $171,000க்கும் மேற்பட்டத் தொகையை மின்னஞ்சல் வழி நடந்த இணைய வர்த்தக மோசடியில் இழந்துவிட்டதாக காவல் துறையில் செய்த புகாரின் அடிப்படையில் அவரது குற்றம் வெளிச்சத்துக்கு வந்தது.
ஏஏஹெச் & பார்ட்னர் என்ற நிறுவனத்தின் வங்கிக் கணக்குக்கு கடந்த 2021 ஜூன் மாதத்தில் மெய்டன் நிறுவனம் அந்தத் தொகையை பரிவர்த்தனை செய்துள்ளது.
ஈஸ்டர்ன் கிரீன் பவர் என்ற நிறுவனத்தை பொறியியல் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக மெய்டன் பணியமர்த்தியதற்காக அத்தொகை அனுப்பப்பட்டுள்ளது. 2015 முதல் மெய்டன் இவ்வாறு ஈஸ்டர்ன் நிறுவனப் பணியாளரின் மின்னஞ்சல் வழி தொடர்புகொண்டு பணப்பரிவர்த்தனையில் செயல்பட்டுவந்துள்ளது.
ஆயினும் அதேபோன்ற கட்டணம் செலுத்தும்படி கோரும் மற்றொரு மின்னஞ்சல் மெய்டன் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளருக்கு வந்தது. அது மோசடி மின்னஞ்சல் என்பதை உணராத அவர், பணத்தை ஏஏஹெச் & பார்ட்னர் என்ற நிறுவனத்தின் வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளார்.
பிறகு, ஏஏஹெச் & பார்ட்னர் என்ற நிறுவனத்தின் கணக்கிலிருந்து பணம் வெளிநாட்டில் உள்ள பல வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டதாக அரசாங்க வழக்கறிஞர் டெலிஷியா டான் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறினார். வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறமுடியவில்லை.
கூடுதல் பணம் சம்பாதிக்க நிர்வாக சேவைகளை வழங்கும் ஒசோமி என்ற நிறுவனத்தின் நியமன இயக்குநர்களில் ஒருவராக 2019ல் லியனர்ட் கோ இணைந்துள்ளார். முன்பின் அறியாத வெளிநாட்டு இயக்குநர்களும் இந்த நிறுவனத்தில் இருந்துள்ளனர்.
முறையாக கடமைகளை ஆற்றாத நிறுவன இயக்குநர்களின் குற்றங்களுக்கு 12 மாத சிறை அல்லது $5,000 அபராதம் தண்டனையாக சட்டப்படி வழங்கப்படும்.

