தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தனிநபர் நடமாட்ட சாதன விபத்தில் 69 வயது ஆடவர் மரணம்

1 mins read
dd66bc1f-95d7-4712-94a1-e8c719934066
விபத்தின் காரணமாக தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனத்தின் சக்கரங்களும் இருக்கையும் அகன்றன. - படம்: ஷின் மின்

ஜூரோங் வெஸ்ட்டில் வியாழக்கிழமை (டிசம்பர் 7) நிகழ்ந்த சாலை விபத்தில் 69 வயது ஆடவர் உயிரிழந்தார்.

புளோக் 457 ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 41க்கு அருகே நிகழ்ந்த இந்த விபத்து குறித்து அன்றைய தினம் இரவு 8.35 மணியளவில் காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் கிடைத்தது.

மோசமாகச் சேதமுற்ற தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனத்துக்குப் பக்கத்தில் அந்த ஆடவர் சாலையில் அசைவின்றிக் கிடந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் சீன நாளிதழான ஷின் மின்னிடம் கூறினார். விபத்தில் சிக்கிய ஆண் மோட்டார்சைக்கிளோட்டி வலியால் துடித்தார்.

அந்தத் தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனத்தின் சக்கரங்களும் இருக்கையும் அகன்றன.

அச்சாதனத்தின் பின்சக்கரங்கள் சில மீட்டர் தூரத்தில் கிடந்ததைப் புகைப்படங்கள் காட்டின. திசுத் தாள் பாக்கெட்டுகள் அடங்கிய பிளாஸ்டிக் பைகள் சாலையோரம் சிதறிக் கிடந்தன.

தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனத்தின் சக்கரங்களும் இருக்கையும் அகன்றன.
தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனத்தின் சக்கரங்களும் இருக்கையும் அகன்றன. - படம்: ஷின் மின்

அச்சாதனத்தை ஓட்டிய ஆடவருக்கு குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் இதய இயக்க மீட்பு சிகிச்சை (சிபிஆர்) வழங்கினர்.

விபத்தில் காயமுற்ற இருவரில் ஒருவர் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கும் மற்றொருவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்பட்டனர்.

அந்த 27 வயது மோட்டார்சைக்கிளோட்டி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

ஆனால், தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனத்தை ஓட்டியவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது சுயநினைவுடன் இல்லை. மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்த காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்