தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2024ல் கரிம வரி அதிகரிப்பால் மின்சாரக் கட்டணம் உயரும்

2 mins read
2ea551c0-1adb-4c18-bfe2-991d777ec80b
சராசரியாக, வீடமைப்பு வளர்ச்சிக் கழக நாலறை வீட்டிற்கான மாதாந்திர பயனீட்டுக் கட்டணம் $4 உயரக்கூடும். - படம்: சாவ் பாவ்

குடும்பங்களுக்கான மின்சாரக் கட்டணம் அடுத்த ஆண்டு உயரவிருக்கிறது. கரிம வெளியேற்றத்துக்காக மின்சார உற்பத்தி நிறுவனங்கள் கூடுதல் வரியை எதிர்நோக்கும் என்பதே இதற்குக் காரணம்.

சராசரியாக, வீடமைப்பு வளர்ச்சிக் கழக நாலறை வீட்டிற்கான மாதாந்திர பயனீட்டுக் கட்டணம் $4 உயரக்கூடும் என்று தேசிய பருவநிலை மாற்ற செயலகம் முன்னுரைத்துள்ளது. கரிம வரிக்கான முழுச் செலவையும் பயனீட்டாளர்கள் ஏற்கும் பட்சத்தில் இது பொருந்தும்.

கட்டண உயர்வு குறித்து மின்சார விற்பனையாளர்கள் இன்னும் மேல்விவரம் வெளியிடவில்லை.

2024 முதல் 2025 வரை சிங்கப்பூரின் கரிம வரி, ஒரு டன் கரிம வெளியேற்றத்துக்கு $25ஆக உயரும். தற்போது அந்த வரி ஒரு டன்னுக்கு $5ஆக உள்ளது.

2019ல் அறிமுகம் கண்ட கரிம வரி, 2023 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு டன்னுக்கு $5ஆக நிர்ணயிக்கப்பட்டது.

ஆண்டுக்கு குறைந்தது 25,000 டன் கரிமத்தை வெளியேற்றும் நிறுவனங்கள், இந்த மாற்றத்துக்கு தங்களைப் பழக்கிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது.

கரிம வரியில் ஒவ்வொரு $5 ஏற்றத்தால் குடும்பங்களுக்கான மின்சாரக் கட்டணம் 1 விழுக்காடு உயரக்கூடும் என்று செயலகம் கணக்கிட்டது. இதன் பொருட்டு, 2024ல் மின்சாரக் கட்டணம் 4 விழுக்காடு உயரக்கூடும்.

இங்குள்ள குடும்பங்கள் மின்சார விற்பனையாளரிடம் விலைத் திட்டத்தைத் தேர்வு செய்யலாம், அல்லது எரிசக்திச் சந்தை ஆணையத்தால் நிர்ணயிக்கப்படும் ஒழுங்குமுறைப்[Ϟ]படுத்தப்பட்ட கட்டணத்தில் எஸ்பி குழுமத்திடம் இருந்து மின்சாரம் வாங்கலாம்.

இந்நிலையில், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய மின்சார விற்பனையாளர்கள், மின்சாரக் கட்டணம் சரியாக எவ்வளவு உயரும் என்பது குறித்த விவரங்களை வெளியிடவில்லை.

மின்சார விற்பனைச் சந்தையில் கிட்டத்தட்ட 27 விழுக்காடு பங்கு வகிக்கும் முன்னணி விற்பனையாளரான ஜெனெகோ, “கரிம வரியில் செய்யப்படும் மாற்றங்களுக்குத் தகுந்தவாறு மின்சாரக் கட்டணம் சரிசெய்யப்படும்,” என்றது.

மற்றொரு மின்சார விற்பனையாளரான செனோகோ எனர்ஜி, “கரிம வரி அங்கம் மின்சாரக் கட்டணத்தில் அனேகமாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், எரிசக்திப் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சி[Ϟ]களில் தொழில் நிறுவனங்களும் குடும்பங்களும் தங்களது மின்சாரப் பயன்பாட்டை மறுமதிப்பீடு செய்ய ஊக்குவிக்கப்படும்,” என்று கூறியது.

குறிப்புச் சொற்கள்