குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு $30 மில்லியன் உதவி: டிபிஎஸ் வங்கி கடப்பாடு

குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு $30 மில்லியன் உதவி: டிபிஎஸ் வங்கி கடப்பாடு

2 mins read
769332ca-934d-456f-9192-e237d4c72c76
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுடன் டிபிஎஸ் அறநிறுவனம் பங்காளித்துவம் செய்துகொண்ட நிகழ்வில் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ மற்றும் டிபிஎஸ் வங்கி தலைமை நிர்வாக அதிகாரி பியூஷ் குப்தா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டிபிஎஸ் அறநிறுவனம் அடுத்த மூன்றாண்டுகளில் குறைந்த வருமானக் குடும்பத்தினருக்கான இரண்டு திட்டங்கள் நிறைவேற, $30 மில்லியன் பங்களிக்க உள்ளது.

பாலர் பள்ளிக் கல்விக்கு ஊக்குவிக்கவும் சொந்த வீடு வாங்குவதற்கான சேமிப்பை மேற்கொள்ளவும் இந்தத் திட்டங்கள் குடும்பங்களுக்கு உதவிபுரியும்.

இந்த ஆதரவு நடவடிக்கைகளுக்காக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுடன் கைகோத்து உள்ளதாக டிபிஎஸ் அறநிறுவனம் சனிக்கிழமை (டிசம்பர் 9) தெரிவித்தது.

கடந்த நவம்பர் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ‘காம்லிங்க்’ ஆதரவுத் தொகுப்புத் திட்டம் உட்பட்ட இரண்டு அம்சங்களுக்கு டிபிஎஸ் அறநிறுவனம் நிதி ஆதரவு வழங்கும்.

இந்த இரண்டு தொகுப்புத் திட்டங்களின் மூலம் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் 1,400 குடும்பங்களும் ஏறக்குறைய 8,500 குழந்தைகளும் பலனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சுடன் அறநிறுவனம் செய்துகொண்ட பங்காளித்துவத்தை தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீயும் டிபிஎஸ் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி பியூஷ் குப்தாவும் தொடங்கி வைத்தனர்.

சமூகத்தில் எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய மக்களின் முன்னேற்றத்திற்கு, வரும் பத்தாண்டுகளில் $1 பில்லியன் ஆதரவு வழங்க டிபிஎஸ் வங்கி உறுதிபூண்டு உள்ளதாகவும் அதன் முதல் நடவடிக்கையாக இந்தப் பங்காளித்துவம் அமைந்துள்ளதாகவும் திரு குப்தா குறிப்பிட்டார்.

“காம்லிங்க் பிளஸ் திட்டத்தில் இடம்பெறும் குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்குவதன் மூலம் அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியை அளிக்க முடியும்.

“அத்துடன் அந்தக் குடும்பங்கள் விரைவிலேயே சொந்த வீடுகளைப் பெறமுடியும். அத்தகைய குடும்பங்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் டிபிஎஸ் வங்கியும் தனது பங்கை ஆற்றும்,” என்றார் திரு குப்தா.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் டெஸ்மண்ட் லீ, “வசதி படைத்தவர்கள் தங்களது செல்வங்களைத் தங்களது குழந்தைகளிடம் மாற்றிவிடும்போது குறைந்த வருமானப் பின்னணி கொண்ட குடும்பத்தினரின் முன்னேற்றம் கடினமாகிவிடுகிறது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்