சிங்கப்பூர் அதன் பொருளியல் மற்றும் அரசதந்திர விருப்பங்களை நிறைவேற்ற சிங்கப்பூர் ஆயுதப் படையின் வலிமை கைகொடுக்கிறது என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்து உள்ளார்.
சிங்கப்பூர் எதிர்நோக்கும் பாதுகாப்பு சிக்கல்களுக்கு சிறப்பான தற்காப்பு மற்றும் அரசதந்திர அணுகுமுறைகள் மூலமே தீர்வுகாண முடியும் என்றும் அதனை வலுவான சிங்கப்பூர் ஆயுதப் படை மூலம் சாதிக்க முடியும் என்றும் திரு தர்மன் கூறியுள்ளார்.
“வட்டார அளவிலும் உலக அளவிலும் சிங்கப்பூரின் ஈடுபாட்டுத் திறன் என்பது சிங்கப்பூர் ஆயுதப் படை ஆற்றலின் அடிப்படையிலேயே உள்ளது என்றார் அவர். சிங்கப்பூரின் அரசுரிமையையும் நலன்களையும் தற்காக்க இது அவசியம்,” என்றார் அதிபர்.
புதிய ஆயுதப் படை அதிகாரிகளின் ஆணை வழங்கும் அணிவகுப்பில் பங்கேற்று சனிக்கிழமை (டிசம்பர் 9) அதிபர் தர்மன் உரையாற்றினார்.
“அனைத்துலக சட்ட ஒழுங்கின் அடித்தள அம்சங்கள் சிரமத்திற்கு ஆளாகும்போது உலகளாவிய ஒத்துழைப்பும் சட்டத்தின் ஆதரவும் பெரிதாகத் தேவைப்படும்.
“சட்டத்தின் ஆட்சி மேலோங்கித் திகழக்கூடிய உலகைக் கட்டிக்காக்க சிங்கப்பூர் எப்போதும் கடப்பாடு கொண்டுள்ளது.
“பிரச்சினைகளுக்கும் பூசல்களுக்கும் தீர்வுகாண பேச்சுவார்த்தையும் கலந்துறவாடுவதும் சிறந்த வழிகளாக இருக்கும். அது உலகத்தின் கடப்பாடாகவும் திகழ்கிறது.
“அதேபோல நெருக்கடிகள் எழாதவாறு தடுக்கும் அனைத்துலக முயற்சிகளுக்கு சிங்கப்பூர் வலுவான ஆதரவை வழங்குகிறது.
தொடர்புடைய செய்திகள்
“இதுபோன்ற அனைத்துலக நாடுகளுடனான ஈடுபாட்டுக்கு சிங்கப்பூர் ஆயுதப் படையின் திறன்கள் அவசியம். அந்தப் படை தொடர்ந்து எழுச்சி காண்கிறது; அது தனது ஆற்றல்களை தொடர்ந்து கூர்தீட்டி வருகிறது; நவீன தொழில்நுட்பங்களை அதற்குப் பயன்படுத்துகிறது.
“பாதுகாப்பு என்று வரும்போது பலம் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. நமது பொருளியல், அரசதந்திர விருப்பங்களை நிறைவேற்ற அதுவே அடித்தளம் அமைக்கிறது,” என்று அதிபர் தர்மன் தமது உரையில் குறிப்பிட்டார்.
ஜூரோங்கில் உள்ள சாஃப்டி ராணுவப் பயிற்சிக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பதவி ஏற்ற 460 அதிகாரிகளில் 368 பேர் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள். 60 பேர் கப்பற்படையையும் எஞ்சிய 32 பேர் ஆகாயப் படையையும் பிரதிநிதித்தனர்.
அதிபர் தர்மன் மேலும் கூறுகையில், “சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த வீரர்களும் வீராங்கனைகளும் எப்போதும் அவசர அழைப்புகளுக்கு ஆயத்தமாக இருப்பார்கள்.
“அது வர்த்தக விமானத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு அச்சுறுத்தலாகட்டும், இணைய அச்சுறுத்தலாகட்டும் அல்லது உள்கட்டமைப்பில் எழும் சிக்கல்களாக இருந்தாலும் அவற்றைச் சந்தித்து சரிசெய்ய இப்படையினர் தயாராக இருக்கிறார்கள்.
அத்துடன் கொள்ளைநோய் சமாளிப்பில் இதர அமைப்புகளுடன் இணைந்து ஆதரவு வழங்கியதும் பல நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியதும் இந்தப் படையினரே,” என்றார்.