சிஓஇ முறையை மாற்றுவதற்கான காலம் கனிந்துள்ளது: நிபுணர்கள் கருத்து

சிஓஇ முறையை மாற்றுவதற்கான காலம் கனிந்துள்ளது: நிபுணர்கள் கருத்து

2 mins read
454b92e7-04bc-489b-962c-aef16be557ff
வாகன எண்ணிக்கை அடிப்படையில் அல்லாமல் பயண தூரத்தின் அடிப்படையில் வாகனமோட்டிகளுக்குக் கட்டணம் விதிக்கலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சாலையில் வாகனப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டண முறை (சிஓஇ) மாற்றப்பட வேண்டும் என்று நிபுணர் குழு ஒன்று தெரிவித்து உள்ளது.

வாகன எண்ணிக்கை உச்சவரம்பின் அடிப்படையில் இயங்கும் சிஓஇ முறையை மறுஆய்வு செய்து மாற்றுவதற்கான காலம் கனிந்திருப்பதாக அறுவரை உள்ளடக்கிய குழுவில் ஐவர் கருத்துத் தெரிவித்து இருந்தனர்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஏற்பாடு செய்த வட்டமேசைக் கூட்டம் ஒன்றில் அவர்கள் கலந்துகொண்டனர்.

பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் காலம் கடந்துவிட்டதாகவும் செயற்கைக்கோள் அடிப்படையிலான அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டண முறையை (இஆர்பி) சிங்கப்பூர் செயல்படுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், பயணம் செய்த தூரத்தின் அடிப்படையில் வாகனமோட்டிகளுக்குக் கட்டணம் விதிக்க முடியும் என்பதும் அவர்களின் கருத்து.

சிஓஇ முறையில் சின்னஞ்சிறு திருத்தங்கள் தேவைப்படுகின்றனவா அல்லது பெரிய அளவில் அது மாற்றி அமைக்கப்பட வேண்டுமா என்பது பற்றி விவாதிக்க நவம்பர் 23ஆம் தேதி இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த ஆண்டில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் சாதனை அளவைத் தொட்டிருக்கும் நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

பெரிய கார்களுக்கும் பொதுப் பிரிவில் இடம்பெற்று உள்ள வாகனங்களுக்குமான சிஓஇ கட்டணங்கள், ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை நடைபெற்ற ஆறு ஏலங்களிலும் தொடர்ச்சியாக ஏற்றம் கண்டன.

‘பி’ பிரிவிற்கான கட்டணம் $150,001 என்றும் பொதுப் பிரிவுக்கான கட்டணம் $158,004ஆக உயர்ந்ததற்குப் பிறகும் நவம்பர் மாத முதல் ஏலத்தில் எல்லாப் பிரிவுகளுக்குமான சிஓஇ சரிந்தது.

விநியோகத்தை அதிகரிக்கும் வகையில், வருங்காலத்திற்கான வாகன உரிமைச் சான்றிதழ்களை அரசாங்கம் முன்கூட்டியே அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து கட்டணங்களில் வீழ்ச்சி பதிவானது.

இந்நிலையில், சாலைப் பயன்பாட்டுக்கு தூர அடிப்படையிலான கட்டண முறையை அறிமுகம் செய்து பெரியதொரு மாற்றத்தை அரசாங்கம் ஏற்படுத்துவதற்கான காலம் கனிந்துள்ளதாக பொருளியல் நிபுணர் இவான் பிங்க் தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு செய்வதன் மூலம் கரிம வெளியேற்றத்திற்கு மறைமுகக் கட்டணத்தையும் வசூலிக்க முடியும் என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகப் பேராசிரியருமான திரு இவான்.

எம்ஆர்டி கட்டமைப்பு விரிவடைந்திருக்கும் வேளையிலும் செயற்கைக்கோள் அடிப்படையிலான மின்னியல் சாலைக் கட்டண முறை (இஆர்பி) அறிமுகமாகி உள்ள நிலையிலும் சிஓஇ முறையில் மாற்றம் செய்ய இதுவே தக்க தருணம் என்றார் அவர்.

அவருடன் இணைந்த மற்ற ஐந்து நிபுணர்கள்: சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் வால்டர் தெசீரா, அதே பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளரும் இதற்கு முன்னர் மூத்த வாகன வர்த்தகராக இருந்தவருமான டாக்டர் விக்டர் குவான், வாகன விற்பனை ஆலோசகர் சே குவீ நெங், பழைய கார் விற்பனை நிறுவன அதிகாரி கேரோ ஆரன் டான், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் மூத்த போக்குவரத்து செய்தியாளர் கிறிஸ்டஃபர் டான்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்