பாசிர் ரிஸ்ஸில் நிகழ்ந்த விபத்தில் 76 வயது மூதாட்டி உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 10) இரவு பாசிர் ரிஸ் ரைஸ்-பாசிர் ரிஸ் டிரைவ் 3 சந்திப்பில் இவ்விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்து தொடர்பாக 58 வயது டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
கவனக்குறைவாக டாக்சி ஓட்டிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
இரவு 7.55 மணியளவில் இந்தச் சம்பவம் தொடர்பில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும் அது கூறியது.
சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது வலது பக்கமாகத் திரும்பிய டாக்சி மோதியதாக நம்பப்படுகிறது என்று சாவ்பாவ் சீன நாளிதழ் தெரிவித்தது.
மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த மூதாட்டி காயங்கள் காரணமாக மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பான காவல்துறையின் விசாரணை தொடருகிறது.

