தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆடம்பரப் பொருள் மோசடியில் தம்பதியர் மீது புதிய குற்றச்சாட்டுகள்

2 mins read
8a36b0ca-7d58-4cfe-99c3-eea07862cc61
பை ஜியாபெங்கையும் (இடதுகோடி), பன்சுக் சிறிவிபாவையும் (வலமிருந்து 2வது) காவல்துறையினர் அழைத்துச் சென்றபோது எடுக்கப்பட்ட படம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஏறக்குறைய $32 மில்லியன் மதிப்புள்ள ஆடம்பரப் பொருள்களை விநியோகிக்காமல் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தம்பதியர் மீது புதிய குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

தாய்லாந்து நாட்டவரான திருவாட்டி பன்சுக் சிறிவிபா, 28, மீது டிசம்பர் 12ஆம் தேதி புதிய 10 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய ஆறு குற்றச்சாட்டுகள், $198,000 மதிப்புள்ள ஆடம்பர கைக்கடிகாரங்களை தவறாகக் கையாண்ட மூன்று குற்றச்சாட்டுகள், அதிகாரிகளிடம் முறைப்படி தெரிவிக்காமல் 260,000 வெள்ளியை சிங்கப்பூருக்கு வெளியே அனுப்பிய ஒரு குற்றச்சாட்டும் அவற்றில் அடங்கும்.

பயண ஆவணங்களை ஒப்படைத்த பிறகும் சிங்கப்பூரிலிருந்து வெளியேறியது உட்பட பன்சுக் மொத்தம் 195 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

சிங்கப்பூரரான பை ஜியாபெங், 27, மீது இரண்டு புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மோசடி செய்த பணத்தில் வாங்கியதாக நம்பப்படும் ஆடம்பர காரை வைத்திருந்தது, 260,000 வெள்ளியை பன்சுக் நாட்டுக்கு வெளியே எடுத்துச் செல்ல உதவியது ஆகியன அவை.

பை ஜியாபெங் தற்போது மொத்தம் ஒன்பது குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். விசாரணைக்கு வராதது, காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் கையெழுத்திட மறுத்தது போன்ற குற்றச்சாட்டுகளும் அவற்றில் அடங்கும்.

2022 ஜூலை மாதத்தில் காவல்துறையிடம் 180 புகார்கள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தம்பதியரின் மோசடி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

அவர்களுடைய வாடிக்கையாளர்கள் ரோலக்ஸ், பாடெக் பிலிப் கைக்கடிகாரங்கள், ஹமீஸ் பைகள் உட்பட ஆடம்பர கைக்கடிகாரங்களையும் ஆடம்பரப் பைகளையும் வாங்க முன்பணம் கொடுத்திருந்தனர். ஆனால் பொருள்கள் வந்து சேரவில்லை.

பன்சுக்கும் பையும் 2022 மார்ச் முதல் ஜூன் வரை ஆடம்பர பொருள்களை விற்பதாகக் கூறி டிரேட்நேஷன் நிறுவன வாடிக்கையாளர்களிடமிருந்து ஏறக்குறைய $24.7 மில்லியனுக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. நிறுவனத்தின் நிதி நிலை காரணமாக வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

பன்சுக்கும் ‘டிரேட்லக்சரி’ வாடிக்கையாளர்களிடமிருந்து $946,948 ஏமாற்றி வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

ஏமாற்றுக் குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் திரு பை 2022 ஜூன் 27ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு மறுநாள் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பன்சுக் கைது செய்யப்படவில்லை. ஆனால் காவல்துறை விசாரணையில் அவர் உதவி வந்தார். ஜூன் 30ஆம் தேதி தனது பாஸ்போர்ட்டை அவர் காவல்துறையிடம் ஒப்படைத்திருந்தார். அதன் பிறகு தம்பதியரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இருவரும் ஜூலை 4ஆம் தேதி லாரி ஒன்றின் உள்ள கொள்கலனில் மறைந்து சிங்கப்பூரிலிருந்து தப்பிவிட்டனர்.

அவர்களுக்கு எதிராக இண்டர்போல் வழியாக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 10ஆம் தேதி தாய்லாந்து காவல்துறை தகவல் அளித்ததைத் தொடர்ந்து ஜோகூரில் உள்ள ஹோட்டலில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்