சிங்கப்பூரில் உள்ள இஸ்ரேலியத் தூதரகத்தின் நுழைவாயிலில் பதாகைகளை வைத்ததாகக் வைத்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் காவல்துறை விசாரணைகளுக்கு உதவிவருகிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பில், டிசம்பர் 11ஆம் தேதி இரவு 10:10 மணியளவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாகக் காவல்துறை கூறியது.
தூதரக வாசலில் பதாகைகளை வைத்த அந்த 20 வயதுப்பெண் அங்கிருந்து கிளம்புமுன் அவற்றைப் படம் எடுத்ததாகவும் காவல்துறைப் பேச்சாளர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பரவிய படங்களில், இஸ்ரேல்-ஹமாஸ் போரைச் சார்ந்த குறிப்புகளைக் கொண்ட பதாகைகளைக் காணமுடிந்தது.
காவல்துறையும் தேசிய பூங்காக் கழகமும் அக்டோபர் 18ஆம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பான பொது நிகழ்ச்சிகளுக்கும் ஒன்றுகூடல்களுக்கும் அனுமதி மறுக்கப்படும் என்று தெரிவித்தன. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அவ்வாறு அனுமதி மறுக்கப்படுவதாக அவை கூறின.
தூதரக வாசலில் பதாகைகளை வைத்ததாகக் கூறப்படும் பெண்ணிடம் விசாரணை தொடர்கிறது.

