‘ஷியோக் கிச்சன் கேட்டரிங்’ சமைத்த உணவை உண்ட 95 பேர் வயிற்றுக்கோளாறு தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சமையல் சேவை வழங்க அந்நிறுவனத்திற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் ‘ஷியோக் கிச்சன் கேட்டரிங்’ வழங்கிய உணவை உண்டபின் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாக சிங்கப்பூர் உணவு அமைப்பும் சுகாதார அமைச்சும் வியாழக்கிழமை (டிச. 14) தகவல் வெளியிட்டன.
வயிற்றுக் கோளாறு தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ உதவியை நாடியதாகவும் அவர்களில் யாரும் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. விசாரணை தொடர்கிறது.
1, செனோகோ அவென்யூவில் செயல்பட்டு வரும் ‘ஷியோக் கிச்சன் கேட்டரிங்’ மீதான தற்காலிகத் தடை டிசம்பர் 14ஆம் தேதி நடப்புக்கு வந்தது. மறுஅறிவிப்பு வரும் வரை தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் நிறுவனத்தின் சமையல் அறை, அங்குள்ள கருவிகள், பாத்திரங்களை சுத்தப்படுத்தவும், காய்கறிகள், உடனடியாக உண்ணக்கூடிய உணவுகள் அனைத்தையும் அப்புறப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்நிறுவனத்தில் உணவுகளைக் கையாள்பவர்கள் உணவுப் பாதுகாப்புக்கான முதல்நிலைப் பயிற்சியில் மீண்டும் தேர்ச்சி பெறவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

