சிங்கப்பூரில் ஒட்டுமொத்த ஊழியர்களுக்கான தேவை குறைந்து வருகிறது. அதற்கான அறிகுறிகள் தொடர்ந்து தென்படுகின்றன.
சுகாதாரப் பராமரிப்பு, நிதிச் சேவைகள் உள்ளிட்ட வளர்ச்சி அடைந்து வரும் துறைகள் உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்புகளுக்கு கைகொடுத்தாலும் வேலைக்கான காலியிடங்களும் குறைந்து வருகின்றன.
மனிதவள அமைச்சு, இவ்வாண்டின் 3வது காலாண்டுக்கான இறுதி செய்யப்பட்ட தரவுகளை டிசம்பர் 14ஆம் தேதி வெளியிட்டது.
2023 செப்டம்பரில் 78,400 வேலை வாய்ப்புகள் இருந்ததை தரவுகள் காட்டியுள்ளன.
இதன் மூலம் தொடர்ந்து ஆறாவது காலாண்டாக வேலை வாய்ப்புகள் குறைந்து வருவது தெரிய வருகிறது. இதற்கு முன்பு 2022 மார்ச் மாதத்தில் வேலை வாய்ப்புகள் 126,000 என்ற நிலையில் உச்சத்தில் இருந்தது.
வேலைக்கான காலியிடங்களுடன் வேலையில் இல்லாத ஊழியர்களின் விகிதம் 2023 செம்பம்பரில் 1.58ஆக இருந்தது. இது, 2023 ஜூனில் இருந்த 1.94 என்ற விகிதத்துடன் ஒப்பிட்டால் குறைவு.
செப்டம்பரில் ஏறக்குறைய வேலைக்கான காலியிடங்களில் பாதி, அதாவது 38,700 வேலைகள், சேவைத் துறைகளில் உள்ள நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் ஆகியோருக்கானது.
அதிக உற்பத்தித் திறன், ஊதியம் ஆகியவற்றுடன் தொடர்புடைய வளர்ச்சித் துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகள் ஒட்டுமொத்த வேலை வாய்ப்புகளில் மூன்றில் ஒரு பங்காக இருந்தது என்று அமைச்சு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
சுகாதாரம், சமூக சேவைகள், தகவல், தொடர்பு, நிபுணத்துவ சேவைகள், நிதி மற்றும் காப்புறுதி துறை உள்ளிட்டவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
தொழிலாளர் தேவை மெதுவடைவதன் மற்றோர் அறிகுறி, இல்லப் பணிப் பெண்கள் தவிர, வேலையில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை வளர்ச்சி 23,600ஆக பதிவாகியுள்ளது.
அந்த எண்ணிக்கை, தொடர்ந்து எட்டாவது காலாண்டாக அதிகரித்துள்ளது.
ஆயினும் 2022ஆம் ஆண்டின் 3வது காலாண்டிலிருந்து அதிகரிக்கும் வேகம் மெதுவடைந்துள்ளது.
2022ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் வேலை வாய்ப்பு வளர்ச்சி 75,900ஆக இருந்தது.
வளர்ச்சி அடைந்து வரும் துறைகளில் வேலையில் உள்ள சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் உணவு, பானத் துறை, சில்லறை வர்த்தகம் ஆகியவற்றில் அந்த எண்ணிக்கை குறைந்தது என்று மனிதவள அமைச்சு கூறியது.
“விடுமுறை முடிந்ததும் மாணவர்கள் தங்கள் தற்காலிக வேலைகளைக் கைவிட்டு வகுப்புகளுக்குத் திரும்பியதால் இந்தச் சரிவு ஏற்பட்டிருக்கலாம்,” என்று அமைச்சு சொன்னது.
இந்த நிலையில் ஆண்டு இறுதி விழாக் காலத்தில் உணவு, பானத்துறை, சில்லறை விற்பனை கடைகளில் அதிக ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்படலாம் என்பதால் நான்காவது காலாண்டில் தற்காலிக ஊழியர்களுக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்த குடியிருப்பாளர்களின் நீண்டகால வேலையின்மை விகிதம் கூடியுள்ளது. 2023 ஜூனில் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 0.5 விழுக்காடாக அது இருந்தது. இது, 2023 செப்டம்பரில் 0.7 விழுக்காட்டுக்கு அதிகரித்துள்ளது.
இந்த விகிதம், பெரும்பாலான வயதினரிடையே தொற்றுநோய்க்கு முந்தைய காலங்களில் காணப்பட்ட வரம்பிற்குள் இருந்தது என்று அமைச்சு கூறியது.
இதற்கிடையில், குடியுரிமை அல்லாதோர் வேலைவாய்ப்பு 20,800ஆக அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த காலாண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது மெதுவான வேகமாகும்.
கட்டுமானம், நிர்வாகம், ஆதரவுச் சேவைகள், உணவு, பானத்துறை, குறைந்த ஊதியம் கொண்ட தற்காலிக வேலைகள் ஆகியவை இந்த உயர்வுக்குக் காரணமாக இருந்துள்ளன.
வேலை இழப்புகளைப் பொறுத்தவரை, முந்தைய காலாண்டின் 3,200லிருந்து 4,110க்கு அதிகரித்துள்ளது.
ஆனால் மொத்த விற்பனையைத் தவிர மற்ற துறைகளில் வேலையின்மை விகிதம் பரவலாக நிலையாக இருந்தது என்று அமைச்சு தெரிவித்தது.

