தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காரில் இழுத்துச் செல்லப்பட்ட சோதனைச்சாவடி அதிகாரி; ஆடவர்மீது குற்றச்சாட்டு

2 mins read
0a012135-bd55-45a1-8282-7bcd74f92b35
அதிகாரி வாகனத்தில் எரிபொருள் அளவைச் சோதித்தபோது ஆபத்தான முறையில் காரை முன்னோக்கிச் செலுத்தியதாக ஓட்டுநர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. - படம் சாவ்பாவ்

ஸ்டீவ் லிங் வெய் லியாங், 38, டிசம்பர் 12ஆம் தேதி, பிற்பகல் 3.40 மணியளவில், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியிலிருந்து ஜோகூர் நோக்கிச் செல்லும் பாதையில் காரை ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காரில் இழுத்துச் செல்லப்பட்டதில் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரியின் முழங்காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இருந்தார்.

சிங்கப்பூர் காவல்துறையும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், வாகனத்தில் குறைந்தபட்ச அளவு எரிபொருள் இல்லை என்பதை அந்த அதிகாரி கண்டறிந்ததாகக் கூறப்பட்டது.

கடப்பிதழை ஒப்படைக்கும்படியும் காரை நிறுத்திவிட்டு தன்னுடன் ஆணைய அலுவலகத்திற்கு வரும்படியும் லிங்கிடம் அந்த அதிகாரி கூறியதாக அந்தக் கூட்டறிக்கை தெரிவித்தது.

அதனை மீறி ஓட்டுநர் வாகனத்தை தொடர்ந்து செலுத்தியதில் சில மீட்டர் தொலைவிற்கு அந்த அதிகாரி இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

முன்னே இருந்த பாதசாரியையும் மற்ற வாகனங்களையும் மோதும் அளவுக்கு அது சென்றது. கைது செய்யப்பட்ட லிங், ஜனவரி 25ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரியின் கட்டளையை மீறியதற்காக அவருக்கு $5,000 அபராதமும் ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரை விட்டு, தரைவழி சோதனைச்சாவடிகளைக் கடக்கும் வாகனங்களில் சட்டப்படி முக்கால்வாசி எரிபொருள் இருக்கவேண்டும்.

இதனைக் கடைப்பிடிக்காத வாகன ஓட்டுநர்களுக்கு $500 அபராதம் விதிக்கப்படும். மேலும் அவர்கள் எல்லையைக் கடக்காமல் மீண்டும் சிங்கப்பூர் திரும்ப வேண்டும்.

குறிப்புச் சொற்கள்