நடக்க சிரமப்படுவோருக்கே நடமாட்ட சாதனம்: மறுஆய்வுக் குழு பரிந்துரை

2 mins read
89da4992-6216-4f84-814b-9a58ca9f4133
மோட்டாரில் இயங்கும் நடமாட்டச் சாதனங்களின் வேகவரம்பை மணிக்கு 10 கிலோமீட்டர் என்பதிலிருந்து 6 கிலோமீட்டருக்குக் குறைக்க மறுஆய்வுக் குழு பரிந்துரைத்து உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நடக்கச் சிரமப்படுபவர் என்று சான்றளிக்கப்படுபவர் அல்லது மருத்துவத் தேவைகள் உடையோர் மட்டுமே தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனங்களை பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று மறுஆய்வுக் குழு ஒன்று பரிந்துரைத்து உள்ளது.

‘ஆக்டிவ் மொபிலிட்டி அட்வைசரி பேனல்’ என்னும் அந்தக் குழு தனது பரிந்துரைகளை வியாழக்கிழமை (டிசம்பர் 14) போக்குவரத்து அமைச்சிடம் சமர்ப்பித்தது.

நடமாட உதவும் ஸ்கூட்டர் போன்றவற்றை நல்ல உடல்நிலையோடு இருப்போர் பயன்படுத்துவது தொடர்பான அக்கறைகள் அண்மைய ஆண்டுகளில் எழுந்துள்ளதாக தனது பரிந்துரையில் அந்தக் குழு குறிப்பிட்டு உள்ளது.

அளவில் பெரிதாகவும், ஆபத்தாகவும் அதிக வேகத்துடனும் அத்தகைய சாதனங்களை ஓட்டுவது, உள்ளிட்ட அக்கறைகள் அவை.

அதற்குத் தீர்வுகாணும் வகையில், மோட்டாரில் இயங்கும் எல்லாவித நடமாட்டச் சாதனங்களுக்கும் வேகவரம்பைக் குறைக்க அரசாங்கத்திற்கு 16 பேர் அடங்கிய அந்தக் குழு பரிந்துரைத்து உள்ளது. மோட்டாரில் இயங்கும் சக்கர நாற்காலிகளுக்கும் அந்தப் பரிந்துரையை அது அளித்து உள்ளது.

அவற்றின் வேகவரம்பை மணிக்கு பத்து கிலோமீட்டர் என்பதில் இருந்து ஆறு கிலோமீட்டருக்கு, அதாவது நடக்கும் வேகத்திற்குக் குறைக்க வேண்டும் என்பது அந்தப் பரிந்துரை.

இவ்வாறு செய்வதன் மூலம் உண்மையிலேயே நடமாடச் சிரமப்படுவோருக்கு உரிய உதவிச் சாதனங்களாக அவற்றை ஆக்க முடியும் என்கிறது குழு.

வேகவரம்பைக் குறைப்பதற்கான பரிந்துரைக்காக மறுஆய்வுக் குழு வெளிநாடுகளில் கடைப்பிடிக்கப்படும் விதிவரம்புகளை ஆய்வு செய்தது.

உதாரணத்திற்கு, பிரிட்டனில் நடைபாதைகளில் செலுத்தப்படும் நடமாட்டச் சாதனங்களின் வேகவரம்பு மணிக்கு 6.4 கிலோமீட்டராகவும் ஸ்பெயினின் பெனிடோர்ம் நகரில் மணிக்கு 4 கிலோமீட்டராகவும் உள்ளதை குழு கண்டறிந்தது.

நடமாட்ட உதவி சாதனங்களை நடைபாதைகளிலும் சைக்கிளோட்டப் பாதைகளிலும் மட்டுமே பயன்படுத்த முடியும். சாலைகளில் அவற்றை ஓட்டிச் செல்ல முடியாது.

தற்போது சிங்கப்பூரில் உள்ள நடமாட்ட உதவி சாதனங்கள் மற்றும் அவற்றைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பற்றி அக்குழுவால் விவரம் அளிக்க இயலவில்லை. காரணம், அத்தகைய சாதனங்களை வாங்கும்போது அவற்றைப் பதிவு செய்ய வேண்டியதில்லை.

இருப்பினும், சிங்கப்பூரின் மக்கள்தொகை மூப்படைவதால் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என குழு எதிர்பார்க்கிறது.

குறிப்புச் சொற்கள்