அதிக கட்டணம் வசூலித்த ஏழு டாக்சி ஓட்டுநர்கள்

2 mins read
a4ee2b7e-0e8a-41ed-920b-05a636c719ea
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தண்டனைப் புள்ளிகள் திட்டத்தின்படி, ஆறு புள்ளிகளோ அதற்கு மேலாகவோ பெறும் டாக்சி ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்யப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மரினா பே சேண்ட்ஸ், சாங்கி விமான நிலையம் ஆகிய இடங்களில் பயணிகளிடம் இருந்து நான்கு மாதகாலம் அதிகக் கட்டணம் வசூலித்த ஏழு டாக்சி ஓட்டுநர்கள் மீது நிலப் போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இவ்வாண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை இரு டாக்சி ஓட்டுநர்கள் டாக்சி மீட்டர் காட்டிய கட்டணத்துக்கு மேல் $20 கூடுதலாக பயணிகளை கட்டச் சொல்லியுள்ளனர்.

மேலும் இரு டாக்சி ஓட்டுநர்கள் மீட்டர் கட்டணத்துக்கு மேல் 20 வெள்ளி, அல்லது அதற்கு மேலான கட்டணத்தை வசூல் செய்துள்ளனர் என்று டிசம்பர் 15ஆம் தேதி ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

அந்த நான்கு டாக்சி ஓட்டுநர்களும் $500 அபராதம் செலுத்தி 12 அல்லது 21 தண்டனைப் புள்ளிகள் பெற்றுக்கொள்ளலாம் என்று அவர்களிடம் கூறப்பட்டது. இதை அவர்கள் ஏற்கவில்லை எனில் அவர்கள் மீது பொதுப் போக்குவரத்து மன்ற சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தி வழக்குத் தொடுக்கப்படும் என்றும் கூறப்ப;ட்டது.

வேறு மூன்று டாக்சி ஓட்டுநர்கள் பயணிகளிடம் மீட்டருக்கு மேல் அதிக கட்டணம் கேட்டனர். ஆனால், இதில் பயணிகள் அந்த டாக்சிகளில் பயணம் மேற்கொள்ளவில்லை என்று ஆணையத்தின் அறிக்கை விளக்கியது.

இந்த டாக்சி ஓட்டுநர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு $100 அபராதத் தொகை கட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி அவர்கள் இந்த அபராதத்தை ஏற்றுக்கொண்டு செலுத்தினால் அவர்களுக்கு மூன்று தண்டனைப் புள்ளிகள் வழங்கப்படும்.

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தண்டனைப் புள்ளிகள் திட்டத்தின்படி, ஆறு புள்ளிகளோ அதற்கு மேலாகவோ பெறும் டாக்சி ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்யப்படலாம்.

குறிப்புச் சொற்கள்