மக்களின் மின்னியல் சார்ந்த வாழ்க்கை முறையைப் பாதுகாக்க, ‘கிளவுட் சேவை‘ மற்றும் கணினியில் தகவல் சேகரிப்பு, சேமிப்பு, செயல்பாடு போன்ற சேவைகள் வழங்கும் மையங்கள் விரைவில் திருத்தப்படவுள்ள சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு சட்டத்தன் கீழ் செயல்பட வேண்டும்.
வங்கிகள், தொலைத்தொடர்புச் சேவைகள், எரிபொருள் நிறுவனங்கள் போன்ற முக்கிய தகவல் உள்கட்டமைப்பு உரிமையாளர்களை மேற்பார்வையிடும் இணையப் பாதுகாப்பு ஆணையரின் அதிகாரத்தை விரிவாக்க புதிய சட்டத் திருத்த மசோதா விழைகிறது.
அதன்படி மின்னிலக்க உள்கட்டமைப்பில் முக்கியப் பங்காற்றும் நிறுவனங்களும் ஆணையரின் மேற்பார்வையின்கீழ் வரும். கணினி மற்றும் கணினிக்கான தகவல் சேகரிப்பு, சேமிப்பு நிறுவனங்கள் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு.
கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி பொதுமக்களிடம் கருத்துத் திரட்டும் நோக்கில் வெளியிடப்பட்ட அறிக்கையில் சிங்கப்பூரின் செயல்திறன், மின்னியல் உள்கட்டமைப்பு நல்ல முறையில் செயல்படுவதை அதிகம் சார்ந்திருக்கிறது என்று சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது.
பல்வேறு சேவைகள் மின்னியல் உள்கட்டமைப்பினால் இயங்குவதால், தடைபடாமல் அது செயல்படவேண்டும். உள்ளூர்ச் சந்தையில் முக்கிய இடம்பெற்றுள்ள இகுவிநிக்ஸ், மைக்ரோசாஃப்ட் போன்ற தகவல் மைய நிறுவனங்கள், கூகுள், அமெசான்வெப் போன்ற “கிளவுட் சேவை” நிலையங்களும் மின்னிலக்க உள்கட்டமைப்பில் அடங்கும்.
இணைய ஊடுருவிகளால் பெரிய அளவிலான சேவைத் தடை ஏற்படுவதைத் தவிர்க்கும் இலக்குடன் இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய, மசோதா பரிந்துரைக்கிறது.
அமைப்புகள், இணைய ஊடுருவல் குற்றங்களை உடனடியாக தெரிவித்து, குறிப்பிடப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும். தவறினால், அபராதம் விதிக்கப்படும்.
இணையப் பாதுகாப்பு சட்டங்கள் காலத்துக்கு ஏற்ப உருவெடுக்கும் சவால்களை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இணையப் பாதுகாப்பு அமைப்பு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
புதிய திருத்தப்பட்ட இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் அரசாங்கம், தகவல் தொடர்பு, விமானப் போக்குவரத்து, நிலப் போக்குவரத்து, சுகாதாரம், வங்கி, நிதிச் சேவைகள், நீர்ப் பராமரிப்பு, பாதுகாப்பு, ஊடகம், அவசரச் சேவைகள் போன்றவை அடங்கும்.