சாங்கி உட்பட உலக விமான நிலையங்களின்வழி தங்கக் கடத்தல்; விழிப்புநிலையில் இந்தியா

சாங்கி உட்பட உலக விமான நிலையங்களின்வழி தங்கக் கடத்தல்; விழிப்புநிலையில் இந்தியா

2 mins read
81e98a7a-2f51-4f6a-8401-bd89ae43edcb
சாங்கி விமான நிலையத்தில் தங்கக் கடத்தலில் ஈடுபடுவதாக நம்பப்படும் இருவர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தங்க ஆபரணங்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரும் பயணிகளைக் கண்டறியும் முயற்சியில் இந்திய அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

இந்தியாவின் சுங்கத் துறை அதிகாரிகளும் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சில பயணிகள் கட்டணம் பெற்று தங்க ஆபரணங்களை இந்தியாவுக்குக் கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக இந்தியாவில் தங்கக் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மத்திய கிழக்கு, ஆசிய விமான நிலையங்களில் தங்கக் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பயணிகளைக் குறிவைப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளும் சம்பந்தப்பட்ட நாடுகளில் அடங்கும். இந்நாடுகளில் இந்தியாவைவிட தங்கம் மலிவான விலையில் கிடைக்கும்.

இக்குற்றம் அதிகம் இடம்பெறுவதாக செய்திகள் தெரிவித்துள்ளன. இவ்வாண்டு செப்டம்பர் மாதம் ஓமான் தலைநகர் மஸ்கட்டிலிருந்து சென்னைக்குச் சென்ற விமானத்தில் 113 பயணிகள் தங்க ஆபரணங்கள், மின்சாரப் பொருள்கள் ஆகியவற்றைக் கடத்திச் சென்றதாக செய்தி வெளியானது. அந்த விமானத்தில் மொத்தம் 186 பயணிகள் இருந்தனர்.

பிடிபட்ட பயணிகளிடம் மொத்தம் 13 கிலோகிராம் எடைகொண்ட தங்கம், 200க்கும் அதிகமான கைப்பேசிகள், மடிக்கணினிகள், சிகரெட்டுகள் ஆகியவை இருந்தன. சாக்லெட், உடல் நறுமண தெளிப்பான் (பர்ஃபியூம்) போன்றவற்றை வழங்கி இச்செயலில் ஈடுபடுமாறு கடத்தல்காரர்கள் பயணிகளை ஈர்த்திருக்கின்றனர்.

சாங்கி விமான நிலையத்தின் ஒன்றாம் முனையத்திலும் கடத்தல்காரர்கள் வெளிநாட்டு ஊழியர்களை அணுகி வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. கடத்தலில் ஈடுபட விரும்புவோர் விமான நிலையத்தில் அமைதியாக இருக்கும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுவர். அங்கு கடத்தல் ஏற்பாடு உறுதியாகும்.

இந்தியாவைச் சென்றடைந்தவுடன் கடத்தலில் ஈடுபடும் மற்றொருவர் கடத்தப்பட்ட தங்க ஆபரணத்தைப் பெற்றுக்கொள்வார் என்று சம்பந்தப்பட்ட பயணிக்கு உறுதியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2022ஆம் ஆண்டு மொத்தம் 3,502 கிலோகிராம் எடைகொண்ட தங்கம் 3,982 பேரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக தி ஹிந்து நாளிதழ் இவ்வாண்டு மார்ச் மாதம் தெரிவித்தது. 2021ஆம் ஆண்டில் 2,445 பேரிடமிருந்து 2,383 கிலோகிராம் தங்கமும் 2020ல் 2,567 பேரிடமிருந்து 2,154 கிலோகிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

(Source: https://www.straitstimes.com/singapore/indian-customs-on-alert-for-travellers-recruited-at-airports-including-changi-to-smuggle-gold)

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்கடத்தல்தங்கம்இந்தியாபயணம்விமானப் பயணம்