தனது பெயரும் படமும் முதலீட்டு மோசடி என்று நம்பப்படும் செயலில் பயன்படுத்தப்படுவதாக சிங்கப்பூரின் முன்னாள் இஸ்லாமிய மதகுருவான ஃபாத்ரிஸ் பக்காரம் எச்சரித்துள்ளார்.
காப்புறுதி, முதலீட்டு நிறுவனம் ஒன்று தன்னை ஆலோசகர் என்று தவறானத் தகவலை வெளியிடுவதாகவும் விளம்பரம் ஒன்றில் தனது படத்தைப் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
டாக்டர் ஃபாத்ரிஸ், சிங்கப்பூரின் மூன்றாவது இஸ்லாமிய மதகுருவாக (முஃப்தி) 2011ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டுவரை பொறுப்பு வகித்தார். அனுமதியின்றி தனது பெயரும் படமும் பயன்படுத்தப்படுவது நியாயமற்ற செயல் என்று டாக்டர் பாத்ரிஸ் வெள்ளிக்கிழமையன்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
“நான் ஒரு முதலீட்டு நிறுவனத்துக்கு ஆலோகர் என்று விளம்பரத்தில் இடம்பெற்ற தகவல் தவறு என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்,” என்றார் டாக்டர் ஃபாத்ரிஸ்.
“ஹலால் முதலீட்டு நிறுவனம் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் நிறுவனம் அனுமதியின்றி எனது பெயரையும் படத்தையும் தவறாகப் பயன்படுத்துவது வருத்தத்துக்குரியது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனது பெயரும் படமும் இடம்பெற்ற அந்த விளம்பரத்தை இணையத்தில் படமெடுத்து (ஸ்கிரீன்கிராப்) டாக்டர் ஃபாத்ரிஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.
(Source: https://www.straitstimes.com/singapore/s-pore-s-former-mufti-warns-followers-about-potential-investment-scam-bearing-his-name-and-photo)

