ஓராண்டுக்குப் பிறகு ஏற்றம் கண்ட ஏற்றுமதி

ஓராண்டுக்குப் பிறகு ஏற்றம் கண்ட ஏற்றுமதி

2 mins read
fb733bd3-105d-4a45-887a-15ddc2f409dc
மின்னணுவியல் சாரா பொருள்களின் ஏற்றுமதி அதிகரித்ததால் ஒட்டுமொத்த அடிப்படையில் ஏற்றுமதிகள் உயர்ந்துள்ளன. - படம்: ஏஎஃப்பி

தொடர்ச்சியாக 13 மாதங்களுக்குச் சரிவு கண்ட பிறகு, சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி கடந்த நவம்பர் மாதம் ஒரு விழுக்காடு அதிகரித்தது.

அக்டோபர் மாதத்தில் திருத்தப்பட்ட 3.5 விழுக்காடு வீழ்ச்சிக்குப் பிறகு, ஆண்டு அடிப்படையில் ஏற்றுமதி ஒரு விழுக்காடு ஏற்றம் கண்டது.

மின்னணுவியல் சாரா பொருள்களின் ஏற்றுமதி அதிகரித்ததால் ஒட்டுமொத்த அடிப்படையில் ஏற்றுமதிகள் உயர்ந்துள்ளன.

மின்னணு பொருள்களுக்கான ஏற்றுமதிகள் தொடர்ந்து சரிந்தன.

கடந்த ஓராண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் மின்னணுவியல் சாரா பொருள்களின் ஏற்றுமதி 5.2 விழுக்காடு கூடியது.

கடந்த அக்டோபர் மாதத்தில் அது 2.9 விழுக்காடு சுருங்கியது.

மருந்துகள், உலக நாடுகளின் மத்திய வங்கிகளால் இருப்புச் சொத்துகளாக வைத்திருக்கப்படாத தங்கம் ஆகியவை மின்னணுவியல் சாரா பொருள்களின் ஏற்றுமதியின் அதிகரிப்புக்கு அதிகம் பங்களித்தன.

மருந்துகளுக்கான ஏற்றுமதி 118.9 விழுக்காடும் உலக நாடுகளின் மத்திய வங்கிகளால் இருப்புச் சொத்துகளாக வைத்திருக்கப்படாத தங்கத்தின் ஏற்றுமதி 106.5 விழுக்காடும் ஏற்றம் கண்டன.

ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டு நவம்பர் மாத்தில் மின்னணுவியல் பொருள்களுக்கான ஏற்றுமதி 12.7 விழுக்காடு குறைந்தது. அக்டோபர் மாதத்தில் அது 5.6 விழுக்காடு குறைந்திருந்தது.

சிங்கப்பூர் ஆக அதிகமாக ஏற்றுமதி செய்யும் முதல் பத்து நாடுகளுக்கான ஏற்றுமதி ஒட்டுமொத்த அடிப்படையில் சரிந்தது.

தைவான், ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனீசியா, தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு செய்யப்பட்ட ஏற்றுமதி அதிகளவில் குறைந்தது.

ஆனால் நவம்பர் மாதத்தில் அமெரிக்காவுக்கு செய்யப்பட்ட ஏற்றுமதிகள் 20.5 விழுக்காடு அதிகரித்ததன.

சீனாவுக்குச் செய்யப்பட்ட ஏற்றுமதிகள் தொடர்ந்து அதிகரித்தன.

நவம்பர் மாதத்தில் அவை ஆண்டு அடிப்படையில் 13.7 விழுக்காடு கூடின.

குறிப்புச் சொற்கள்