மண்டாயில் புதிய அஸ்திமாடம் கட்டப்படக்கூடும்

2 mins read
5df72907-fca3-461b-a6f1-03ce96e30967
மண்டாய் அஸ்திமாட வளாகத்தில் உள்ள 133,000 மாடங்களில் 95 விழுக்காடு நிரப்பப்பட்டு விட்டன என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் இறுதிச் சடங்கு நடத்தும் இடங்களுக்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்ற நிலையில், புதிய இறுதிச் சடங்குக் கூடத்தையும் அஸ்திமாடத்தையும் உள்ளடக்கிய வளாகத்தை அமைக்க அரசாங்கம் திட்டமிடுகிறது.

தற்போதைய மண்டாய் அஸ்திமாடத்திற்கு அருகே அந்த வளாகம் கட்டப்படக்கூடும்.

மண்டாய் அவென்யூவும் செம்பவாங் ரோடும் சந்திக்கும் இடத்தில் புதிய அஸ்திமாட வளாகத் திட்டத்திற்கான இடத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.

கட்டுமானப் பணிகள் உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பாக, சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்பீடு செய்து அங்கு அந்த வளாகத்தை அமைப்பதற்கான சாத்தியம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.

நிலப் பயன்பாட்டுக்கான தேவையில் சமநிலை காணும் அதேநேரத்தில் இத்தகைய அத்தியாவசிய இடங்களை அமைப்பதன் தொடர்பில் அரசாங்கம் முன்கூட்டியே திட்டமிடுவதாக அது குறிப்பிட்டது.

ஏற்கெனவே சுவா சூ காங், ஈசூன், மண்டாய் ஆகிய இடங்களில் அரசாங்கம் அஸ்திமாடச் சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் தனியார் அஸ்திமாடங்களும் செயல்படுகின்றன.

ஈசூனில் உள்ள அஸ்திமாடத்தில் இனி இடமில்லை என்று கூறப்படும் வேளையில் மண்டாய் அஸ்திமாடமும் நிரம்பவிருப்பதாக அமைப்பு கூறியது.

சிங்கப்பூரின் மக்கள்தொகை மூப்படைந்து வரும் நிலையில், 2040ஆம் ஆண்டுவாக்கில் ஆண்டுதோறும் 40,000 பேர் உயிர்நீப்பர் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை சுமார் 20,000ஆகப் பதிவானது. தேசிய சுற்றுப்புற அமைப்பின் ஒருங்கிணைந்த நீடித்த நிலைத்தன்மை ஆய்வறிக்கை 2021/2022ல் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய அஸ்திமாட வளாகம் அமையும் இடத்தில் இடம்பெறக்கூடிய தாவரங்கள், விலங்குகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். அங்கு நீரின் தரம், இரைச்சலின் அளவு, காற்றின் தரம் போன்றவற்றைக் கண்காணிப்பது தொடர்பில் ஆய்வு செய்யப்படும் என்று தேசிய சுற்றுப்புற அமைப்பு கூறியது.

புதிய அஸ்திமாட வளாகத்தின் கட்டுமானத் திட்டத்தை வகுக்கும்போது, அந்த விரிவான ஆய்வு முடிவுகள் கவனத்தில் கொள்ளப்படும் என்று கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்