தூக்கக் கலக்கத்தில் சாலைப் பணியாளரை மோதிய டாக்சி ஓட்டுநர்

2 mins read
75824b32-616a-44c2-bf00-84b0216c8683
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிற்பகல் 2.30 மணிக்கு வேலையைத் தொடங்கிய டாக்சி ஓட்டுநர் ஒருவர் அடுத்த நாள் அதிகாலை 2 மணி வரை டாக்சி ஓட்டிக்கொண்டிருந்தார். அப்போது அவர் தூக்கக் கலக்கத்தில் சாலைப் பணிகளை மேற்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் மீது மோதினார்.

இதனால், மாதவன் நவீன் குமார் எனும் அந்த 25 வயது ஊழியருக்கு மண்டை ஓட்டில் எலும்பு முறிவு, மூளையில் ரத்தக் கசிவு போன்ற பல காயங்கள் ஏற்பட்டன.

அவர் மருத்துவமனையில் 14 நாள்கள் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அவருக்கு 100க்கு மேற்பட்ட நாள்கள் மருத்துவ விடுப்பு கொடுக்கப்பட்டது.

இவ்விபத்தில் சம்பந்தப்பட்ட திரு ஓங் பூன் லியோங் எனும் 64 வயது டாக்சி ஓட்டுநருக்கு டிசம்பர் 18ஆம் தேதியன்று இரண்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தனது வாகனத்தைக் கவனக்குறைவாக ஓட்டி, கடும் காயம் விளைவித்த குற்றச்சாட்டை திரு ஓங் ஒப்புக்கொண்டார்.

மேலும் அவர் விடுதலையாகும் தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்து வகையான வாகனமோட்டும் உரிமங்களை வைத்திருப்பதற்கும் வாகனமோட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

திரு ஓங், 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்குத் தனது டாக்சி ஓட்டும் பணியைத் தொடங்கினார். அடுத்த நாள் அதிகாலை 1.15 மணிக்கு அவர் தனது வேலையை முடித்திருக்க வேண்டும்.

ஆனால் அவர் செப்டம்பர் 14ஆம் தேதி அதிகாலை 2 மணி வரை டாக்சி ஓட்டிக்கொண்டிருந்தார். அப்போது குவீன்ஸ்வேயிலிருந்து போட்ஸ்டவுனை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, அவர் கண்ணசந்துவிட்டார்.

அவரது வாகனம் திரு மாதவன் மீது மோதியது. மாதவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

கண்கள் களைப்புற்று, தூக்கம் வருவதுபோல் இருந்தால், வாகனமோட்டிகள் வாகனமோட்டுவதை நிறுத்திவிட்டு, சற்று நேரம் இளைப்பாற வேண்டும் என்று சிங்கப்பூர் வாகனமோட்டிகள் சங்கம் தனது இணையத் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

கவனக்குறைவாக வாகனமோட்டி மற்றவருக்குக் கடும் காயம் விளைவிப்போரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் $5,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்