சிறுமி இறங்குவதற்குள் டாக்சி கிளம்பிவிட்டது; நிறுவனம் விசாரணை

சிறுமி இறங்குவதற்குள் டாக்சி கிளம்பிவிட்டது; நிறுவனம் விசாரணை

1 mins read
a5aba4a8-2dad-4424-a9db-90f56463f8bb
படங்கள்: - எஸ்ஜி ரோடு விஜிலாண்ட்/ஃபேஸ்புக்

பயணிகள் அனைவரும் இறங்குவதற்குள்ளாகவே டாக்சி ஒன்று நகரத் தொடங்கிய சம்பவம் குறித்து விசாரித்துவருவதாக கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகக் குறைகூறப்படும் நிலையில் நிறுவனம் அவ்வாறு தெரிவித்தது.

சாலைப் பாதுகாப்பு தொடர்பிலான எஸ்ஜி ரோடு விஜிலாண்ட் குழுவின் சமூக ஊடகப் பக்கத்தில் டிசம்பர் 17ஆம் தேதி அந்தக் காணொளி பதிவேற்றப்பட்டது.

காணொளியில் பெண்கள் இருவர் டாக்சியிலிருந்து இறங்குவதைக் காணமுடிகிறது. அது நீல நிற கம்ஃபோர்ட் டெல்குரோ டாக்சி என்றும் 313@சோமர்செட் என்ற முகவரியில் பயணிகளை அது இறக்கிவிட்டதாகவும் எஸ்ஜி ரோடு விஜிலாண்ட் குறிப்பிட்டது.

இறங்கிய பெண்களில் ஒருவர் டாக்சியின் பின்புறத்திலிருந்து தனது பொருள்களை எடுக்கச் செல்வதைக் காணொளியில் காணமுடிகிறது.

டாக்சியின் முன்புறப் பயணி இருக்கையிலிருந்து ஆடவர் ஒருவர் இறங்கி பின்புற இருக்கைக்கு அருகே திறந்திருந்த கதவின் அருகே நிற்கும்போதே டாக்சி நகரத் தொடங்கியது அதில் பதிவாகியுள்ளது.

அந்த ஆடவர் அவசரமாக, பின்புற இருக்கையிலிருந்த சிறுமியை வெளியே இழுத்ததையும் இருவரும் தரையில் விழுந்ததையும் காணொளி காட்டியது. உடனடியாக அந்த டாக்சி நின்றதையும் பார்க்க முடிந்தது.

பெண்கள் இருவரும் கீழே விழுந்தவர்கள் எழுந்து நிற்க உதவினர். இந்தக் காணொளி 125,000க்கு மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து விசாரிப்பதாக கம்ஃபர்ட் டெல்குரோ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவி செய்ததாகவும் கவனமாகச் செயல்படும்படி டாக்சி ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தியதாகவும் அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்