வழக்கநிலைத் தேர்வு முடிவுகள்: தன்னம்பிக்கையுடன் தேர்ந்த மாணவர்

வழக்கநிலைத் தேர்வு முடிவுகள்: தன்னம்பிக்கையுடன் தேர்ந்த மாணவர்

படம்: டினேஷ் குமார்

18 Dec 2023 - 7:51 pm

2 mins read

விபத்து ஒன்றால் கைநரம்பு பாதிக்கப்பட்ட சுதிப் ராகுல் குணசேகர்,16, இப்போது பதக்கங்களை வெல்லும் தரைப்பந்து வீரர்.

ஏழெட்டு வயதில் பேசுவதற்கே தயங்கிய இவர், இப்போது கலகலப்பாக கலந்துரையாடி பள்ளி நண்பர்களை மகிழ்விப்பவராகத் திகழ்கிறார்.

இவ்வாண்டின் பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலைத் தேர்வில் 9 புள்ளிகளைப் பெற்றுள்ள ராகுல், கணக்கு, தமிழ்ப் பாடங்களில் தாம் அடைந்த முன்னேற்றத்தை நினைத்து மகிழ்கிறார்.

திங்கட்கிழமை (டிசம்பர் 18) வழக்கநிலைத் தேர்வு முடிவுகளைப் பெற்ற 13,575 மாணவர்களில் ராகுலும் ஒருவர்.

தேர்வு எழுதியோரில் 4,422 பேர் வழக்கநிலை (தொழில்நுட்பம்) மாணவர்கள். அவர்களில் 97.9 விழுக்காட்டினர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விகிதம், கடந்த ஆண்டில் பதிவான 98 விழுக்காட்டைவிட சற்றே குறைவு.

இவ்வாண்டு தேர்வு எழுதிய 9,153 வழக்கநிலை (ஏட்டுக்கல்வி) மாணவர்களில் 99.4 விழுக்காட்டினர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 77.2 விழுக்காட்டினர் அடுத்த ஆண்டு உயர்நிலை ஐந்துக்குச் செல்லத் தகுதிபெற்றுள்ளனர். தகுதிபெற்றோர் விகிதம் கடந்த ஆண்டு 78.4 விழுக்காடாக இருந்தது.

இவ்வாண்டு வழக்கநிலை (ஏட்டுக்கல்வி) பள்ளி மாணவர்களில் 49 விழுக்காட்டினர் சாதாரண நிலைத் தேர்வுக்கான குறிப்பிட்ட பாடங்களைப் பயின்று தேர்வு எழுதினர்.

தொடக்கப்பள்ளி இறுதியாண்டு தேர்வைச் சரியாக எழுதாதது, இம்முறையாவது நல்ல மதிப்பெண்களைப் பெறவேண்டும் என்ற உந்துதலை ராகுலுக்குத் தந்தது.

(இடமிருந்து) தாயார் ராணி குப்புசாமி, சுதிப் ராகுல் குணசேகர், தந்தை குணசேகர் குழந்தைவேலு, சகோதரர் ராஜிவ் குணசேகர்.
(இடமிருந்து) தாயார் ராணி குப்புசாமி, சுதிப் ராகுல் குணசேகர், தந்தை குணசேகர் குழந்தைவேலு, சகோதரர் ராஜிவ் குணசேகர். - படம்: டினேஷ் குமார்

நான்கு வயது வரை இவருக்குப் பேச்சு வரவில்லை. பேசத் தொடங்கியபோதும் ஓரிரு வார்த்தைகளைத்தான் சொல்வார். இவருடைய பெற்றோர் இதுகுறித்து தொடக்கத்தில் கவலைப்பட்டனர்.

அத்துடன், பாலர் பள்ளிப் பருவத்தில் வயதாக இருந்தபோது ராகுலின் சுண்டுவிரல் கதவின் இடுக்கில் சிக்கிக்கொண்டதால் கைநரம்பு பாதிக்கப்பட்டது.

தொடக்கப்பள்ளியில் ராகுல் தன்னம்பிக்கையின்றி எப்போதும் அமைதியாக இருந்ததைக் கண்ட பெற்றோர், இவரை உறவினர்களுடன் பழக ஊக்குவித்தனர்.

“என் சொந்தக்கார அண்ணன்மார்களும் அக்காமார்களும் எனக்குப் பக்கபலமாக இருந்தனர். மனதில் நினைத்ததைத் துணிச்சலுடன் பேச ஊக்குவித்தனர். விளையாட கற்றுக்கொடுத்தனர். என்னைப் போட்டித்தன்மை மிக்கவனாக உருவாக்கினர்,” என்று ராகுல் நினைவுகூர்ந்தார்.

ராகுலின் வளர்ச்சியை நினைத்துப் பெருமைப்படுவதாக தாயார் ராணி குப்புசாமியும் தந்தை குணசேகர் குழந்தைவேலும் கூறினர்.

“எந்நிலையிலும் எங்கள் மகனுக்கு நாங்கள் ஆதரவு தருவோம்,” என்றார் திரு குணசேகர்.

குறிப்புச் சொற்கள்
பொதுத் தேர்வுஉயர்நிலைப் பள்ளி

தொடர்புடைய செய்திகள்