தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர்-லண்டன்: எஸ்ஐஏ நேரடி விமானச் சேவை

2 mins read
7d28dd51-8aff-4d10-9a98-e42e7b6fa9c7
லண்டன் நகருக்கு எஸ்ஐஏயின் விமானச் சேவைகள் வாரம் 33க்கு அதிகரிக்கிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் தேசிய விமான நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து லண்டனின் காட்விக் விமான நிலையத்திற்கு முதல்முறையாக நேரடி விமானச் சேவையைத் தொடங்குகிறது.

இந்த நேரடி விமானச் சேவை இடைவிடாமல் வாரத்திற்கு ஐந்து முறை இயக்கப்படும் என்று டிசம்பர் 18ஆம் தேதியன்று எஸ்ஐஏ அறிவித்தது.

விமானச் சேவைக்கான கட்டணம் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் டிசம்பர் 19ஆம் தேதியிலிருந்து விமானச் சீட்டுகள் விற்கப்படும் என்று எஸ்ஐஏ கூறியது.

நீண்டதூரம் பறக்கக்கூடிய ஏர்பஸ் ஏ350-900 விமானம் இதற்காகப் பயன்படுத்தப்படும். இது, மொத்தம் 253 இருக்கைகளைக் கொண்டிருக்கும். இதில் 42 பிஸ்னஸ் கிளாஸ், 24 பிரிமியம் எகானமி, 187 எகானமி ஆகியவை உள்ளடங்கும்.

முதல் விமானச் சேவை சிங்கப்பூரிலிருந்து ஜூன் 21ஆம் தேதி தொடங்குகிறது. வாரந்தோறும் திங்கள், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய ஐந்து நாள்களில் சேவைகள் இருக்கும். லண்டன் காட்விக் விமான நிலையத்திலிருந்து ஜூன் 22ஆம் தேதி அன்று முதல் விமானம் சிங்கப்பூர் திரும்புகிறது. வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறுகளில் லண்டனிலிருந்து திரும்பும் சேவைகள் இயக்கப்படும்.

வெஸ்ட் சசக்ஸில் உள்ள காட்விக் விமான நிலையம், மத்திய லண்டனிலிருந்து 47.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அடுத்ததாக உள்ள இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாகும்.

தற்போது ஹீத்ரோ விமான நிலையத்துக்கு எஸ்ஐஏ, ஒரு நாளுக்கு நான்கு சேவைகளை வழங்குகிறது.

காட்விக் விமான நிலையத்திற்கான புதிய சேவைகளுடன் சேர்த்து லண்டனுக்கு எஸ்ஐஏ வழங்கும் விமானச் சேவைகளின் எண்ணிக்கை வாரத்திற்கு தற்போதைய 28லிருந்து 33க்கு அதிகரிக்கிறது.

எஸ்ஏஐ, மான்செஸ்டர் விமான நிலையத்துக்கும் எஸ்ஐஏ வாரத்திற்கு ஐந்து சேவைகளை வழங்குகிறது.

குறிப்புச் சொற்கள்