பள்ளி மாணவர் மீது வாகனத்தை மோதி மரணம் விளைவித்தவருக்கு ஈராண்டு சிறை

2 mins read
92b55be3-c446-4234-8731-75c7e07844dd
மாணவர் அட்ரியல் 23 நாள்களுக்குப் பிறகு மருத்துவமனையில் உயிரிழந்தார். - கோப்புப் படம்: பெரித்தா ஹரியான்

சிவப்பு விளக்கை மதிக்காமல் வாகனத்தை ஓட்டி 14 வயது மாணவர் மீது மோதிய வாகனமோட்டிக்கு டிசம்பர் 18ஆம் தேதி ஈராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவர், பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஃபிர்ஹான் அகில் முகம்மது அம்ரான், 25, ஆபத்தாக வாகனத்தை ஓட்டி மரணம் விளைவித்த குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

சிறைத் தண்டனை முடிந்த பிறகு பத்து ஆண்டுகளுக்கு அனைத்து விதமான வாகனங்களும் ஓட்ட அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.

2022 அக்டோபர் 10ஆம் தேதி காலை 11.30 மணியளவில், உயர்நிலைப் பள்ளி மாணவரான அட்ரியல் சூ வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது பொங்கோலில் உள்ள சுமாங் வாக்கில் நிகழ்ந்த விபத்தில் சிக்கினார்.

அன்றைய தினம், தேர்வுகாலமாக இருந்ததால் காலை 10.30 மணிக்கே பள்ளியிலிருந்து மாணவர்கள் வீடு திரும்பினர்.

சுமாங் லிங்க்கை நோக்கிச் செல்லும் சுமாங் வாக் நடைபாதையர் கடக்குமிடத்தில் பச்சை விளக்கு எரிந்ததும் அட்ரியல் சூ கடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது ஃபிர்ஹான் சிவப்பு விளக்கையும் மீறி வாகனத்தை செலுத்தினார். அப்போது அவரது வாகனம் அட்ரியல் மீது மோதியது.

சாலையைக் கடந்துகொண்டிருந்த ஒரு பெண், கார் மோதி அட்ரியல் தூக்கி எறியப்பட்டதைக் கண்டு 995 எண்ணுக்குத் தகவல் கொடுத்தார். அசைவற்றுக் கிடந்த அட்ரியலின் காதுகளிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

செங்காங் பொது மருத்துவமனையில் அட்ரியல் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மண்டையோடு உடைந்து மூளையில் காயம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

விபத்து நிகழ்ந்து 23 நாள்களுக்குப் பிறகு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு அட்ரில் மரணமடைந்தார்.

குறிப்புச் சொற்கள்
விபத்துஉயிரிழப்பு