சண்டை: ஹாங்காங்கில் சிங்கப்பூர் குடும்பத்தாரும் உள்ளூர்வாசியும் கைது

2 mins read
3b0cc992-a3b1-4da9-bcc8-173a281baccb
வெளிர் நீல நிற சட்டை அணிந்த ஆடவரை இரண்டு ஆடவர்கள் தாக்குவது காணொளி ஒன்று காட்டியது. - படம்: எச்கே01/யூடியூப் 

ஹாங்காங்கிற்குச் சுற்றுலா சென்ற சிங்கப்பூர் குடும்பம் ஒன்று, உள்ளூர் மக்களுடன் சண்டையில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது என்று ஹாங்காங் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த சம்பவம் டிசம்பர் 10 இரவு 10.25 மணியளவில் ஜோர்டன் குடியிருப்பு மாவட்டத்தின் வூசங் தெருவில் உள்ள ஓர் உணவுக் கடையில் நடந்தது.

வெளிர் நீல நிற சட்டை அணிந்த 50 வயதான ஹாங்காங்வாசி, அந்த சிங்கப்பூர் குடும்பம் சாப்பிட்டுக்கொண்டிருந்த இடத்திற்கு அருகில் புகை பிடித்துக்கொண்டிருந்தார். அதைப் பார்த்த அக்குடும்பம் புகார் தெரிவித்ததால் சண்டை ஏற்பட்டது என்று ‘எச்கே01’ செய்தித் தளம் தெரிவித்தது.

அக்குடும்பதைச் சேர்ந்த 54 வயது ஆடவர், அவருடைய 52 வயது மனைவி மற்றும் 17 வயது மகன், கடையை விட்டு வெளியேறிய நேரத்தில் அந்த ஆடவர் தண்ணீர் புட்டி ஒன்றை வைத்து 54 வயதான ஆடவரின் தலையில் அடித்து ஓட்டம் பிடித்தார்.

உடனே, மூவரும் அந்த ஆடவரைத் துரத்திச் சென்று தடுத்து நிறுத்தியபோது சண்டை தொடங்கியது. சண்டையில் ஈடுபட்ட நால்வரையும் ஹாங்காங் காவல்துறை கைது செய்தது.

சமூக ஊடகங்களில் பரவும் காணொளிகளில், வெளிர் நீல நிற சட்டை அணிந்த ஆடவரை இரண்டு ஆடவர்கள் தாகக்குவதும் அவர்களுக்கு அருகில் ஒரு பெண் நிற்பதும் காணொளியில் தெரிகிறது.

மேலும், வெள்ளை சட்டை அணிந்த மற்றொரு பெண் தன் கணவரை விட்டு விடுமாறு கேட்டுக்கொள்வதுபோல் காணொளி காட்டியது.

மற்றொரு காணொளி, சம்பவ இடத்தில் காவல் அதிகாரிகள் தடிகளுடனும் தடுப்புகளுடனும் சண்டையைக் கலைக்க முயன்றதைக் காட்டியது.

குறிப்புச் சொற்கள்