பொருள்கள் வாங்குவது, விற்பது தொடர்பாக நடத்தப்பட்ட மோசடிகளில் இந்த மாதத்தின் முற்பகுதியில் மட்டும் 132 பேர் சிக்கி ஏமாந்தனர். அவர்கள் பறிகொடுத்த தொகை குறைந்தபட்சம் $314,000. இதனை காவல்துறை தெரிவித்து உள்ளது.
இதுபோன்ற மோசடிச் சம்பவங்கள் பெருகுவதால், பொருள்களை வாங்க அல்லது விற்க ஃபேஸ்புக், கேரசல் போன்ற தளங்களைப் பயன்படுத்தும்போது விழிப்புடன் நடந்துகொள்ளுமாறு பொதுமக்களை காவல்துறை கேட்டுக்கொண்டு உள்ளது.
இணைய வர்த்தகத் தளங்களில் பொதுமக்கள் பட்டியலிட்டிருக்கும் பொருள்களை வாங்க அல்லது விற்க விரும்புவதுபோல மோசடிக்காரர்கள், சம்பந்தப்பட்ட தளங்களில் இருந்து தகவல் அனுப்புவர்.
மோசடிக்காரர்கள் என தெரியாமல் அவர்களிடம் விற்பனைக்கு சம்மதிக்கும்போது அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு கியூஆர் குறியீடு அல்லது இணைய இணைப்பு ஒன்று வரும். பொருள்களை அனுப்ப கூரியர் சேவைக்கு அந்த குறியீட்டில் பணம் அனுப்புமாறு கேட்டுக்கொள்வர் . அந்த மோசடி இணைப்பைச் சொடுக்கியதும் போலி வங்கி இணையத்தளத்திற்கு இட்டுச் செல்லும். அதில் விவரங்களைக் கொடுத்த பின்னர் மோசடிக்காரர்கள் பணத்தைச் சுரண்டிவிடுவர்.
அனுமதிக்காத பரிவர்த்தனைகள் நடைபெற்றதை அறியும்போதுதான் தாங்கள் ஏமாந்ததை பொதுமக்கள் உணர்வர்.
எனவே, ஸ்கேம்ஷீல்டு போன்ற மோசடித் தடுப்பு செயலியை பொதுமக்கள் தங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யுமாறும் வங்கி பரிவர்த்தனைக்கான வரம்பு நிர்ணயித்தல் போன்ற பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டு உள்ளது.