சிங்கப்பூர் எஃப்1 கார் பந்தயம் ஆகச் சிறந்தது: அனைத்துலக ஊடகம்

2 mins read
36b981f2-5dd5-41c1-812d-8c3c2dd239b2
2023ஆம் ஆண்டு சிங்கப்பூர் இரவுநேர கார் பந்தயத்தில் வாகை சூடியதை கொண்டாடுகிறார் ஃபெராரி குழுவின் கார்லோஸ் செயின்ஸ் - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நடத்திய சிங்கப்பூர் 2023ஆம் ஆண்டு ஃபார்முலா ஒன் கார் பந்தயம் வண்ண ஒளிவிளக்குகளின் கீழ் சற்றும் விறுவிறுப்பு குறையாமல் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்றது.

இது தற்பொழுது அனைத்துலக ரீதியில் பல நாட்டு ஊடகங்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

சிங்கப்பூர் எஃப்1 பந்தயத்தில் ரெட் புல் குழுவின் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் ஐந்தாம் இடத்திலும் அவரது சகாவான கார்லோஸ் பெரஸ் எட்டாம் இடத்திலும் வந்தனர்.

2023ஆம் ஆண்டில் இடம்பெற்ற 22 பந்தயங்களில் சிங்கப்பூர் பந்தயத்தைத் தவிர மற்ற அனைத்திலும் ரெட் புல் குழு வெற்றி பெற்று புள்ளிகளைக் குவித்தது. அந்தப் போட்டியில் ஃபெராரியின் கார்லோஸ் செயின்ஸ் வெற்றி வாகை சூடினார்.

‘ஸ்கை ஸ்போர்ட்ஸ்’, ‘இஎஸ்பின்’, பிரிட்டனின் ‘மெட்ரோ’, ‘டபிள்யூடிஎஃப்ஒன்’ எனப்படும் கார் பந்தய இணையத்தளம் ஆகிய ஊடகங்கள் சிங்கப்பூரில் நடைபெற்ற பந்தயமே ஆகச் சிறந்தது என வர்ணித்தன.

இவற்றுடன், மோட்டார்ஸ்போர்ட் என்ற சஞ்சிகை தனது சொந்த விருதுக்காக சிங்கப்பூர் பந்தயத்தை பரிந்துரை செய்துள்ளது.

இது பற்றிக் கூறிய ஸ்கை ஸ்போர்ட்ஸ், “ரெட் புல் வெல்லாத ஒரே பந்தயம் என்ற காரணத்திற்காக மட்டும் சிங்கப்பூர் பந்தயம் சிறந்தது என்று கூறவில்லை.

“செயின்ஸ், லாண்டோ நோரிஸ், ஜார்ஜ் ரஸ்ஸல், லுவிஸ் ஹேமில்டன் ஆகிய போட்டியாளர்கள் போட்டியின் முடிவில் முன்னிலைக்கு வர கடும் போட்டியில் ஈடுபட்டது உண்மையிலேயே விறுவிறுப்பாக இருந்தது,” என்று விவரித்தது.

சிங்கப்பூர் கார் பந்தயத்தில் சில மிகவும் நெருக்கமான போட்டியை கண்டு களித்ததாக டபிள்யூடிஎஃப்ஒன் வர்ணித்துள்ளது. இதில் மெர்சிடிஸ் குழுவினர் செயின்ஸ், நோரிஸ் இருவரையும் பின்தொடர்ந்தது மிகவும் நெருக்கமான போட்டியாகத் திகழ்ந்தது. அத்துடன் இறுதியாக 10வது சுற்றில் ஜார்ஜ் ரஸ்ஸல் மோதி விபத்துக்குள்ளானது மறக்க முடியாத ஒன்று என்றும் அந்த ஊடகம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்