மாதை மோதி மரணம் விளைவித்த ஓட்டுநருக்கு 10 மாத சிறை

1 mins read
79ba575a-60c1-42ee-8b81-aa8e7e68bf57
படம் - தமிழ் முரசு

திருவாட்டி பெர்னடெட் மா சுவி ஹார், 79, என்ற மாது இவ்வாண்டு பிப்ரவரி மாதம் மரின் பரேடில் உள்ள பாதசாரிகள் சாலையைக் கடக்கும் பகுதியில் சாலையைக் கடந்து சென்றார்.

சிவலிங்கம் சுரேஷ் என்ற 40 வயதுடைய இந்திய நாட்டைச் சேர்ந்த அந்த ஓட்டுநர், கவனமின்றி லாரி ஓட்டியதை ஒப்புக்கொண்டார்.

அவருக்கு கவனமின்றி லாரி ஓட்டி மாதுக்கு மரணம் விளைவித்ததற்காக புதன்கிழமையன்று 10 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன், சிறைத் தண்டனைக் காலம் முடிந்தபின், அவர் அனைத்துவித வாகனங்களையும் எட்டு ஆண்டுகளுக்கு ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

திரு சிவலிங்கம் விபத்து நடந்த பிப்ரவரி 28ஆம் தேதி காலை கிட்டத்தட்ட 11.30 மணிக்கு வேலைக்கு செல்லும்போது மரின் கிரசென்டை நோக்கி மரின் டெரஸ் சாலையில் லாரியை ஓட்டிச் சென்றதாக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நீ ஆன் தொடக்கப் பள்ளி அருகே பாதசாரிகள் சாலையைக் கடக்கும் பகுதியை நோக்கி வருவதை திரு சிவலிங்கம் கவனிக்கத் தவறி மாது மீது மோதியதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

திருவாட்டி மா, சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

அவரைப் பரிசோதித்துப் பார்த்ததில் அவருக்குப் பலவித காயங்கள் ஏற்பட்டு, மண்டை ஓடு முறிந்து மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதும் கண்டறியப்பட்டது.

விபத்து நடந்த அன்று இரவு ஏழு மணிக்கு அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்