மருத்துவமனையில் சேரும் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மருத்துவமனையில் சேரும் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2 mins read
c3db63d6-bb11-45b4-98c4-67a377602c30
கூட்டமான இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்துகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த வாரம் 965க்கு அதிகரித்தது. அதற்கு முந்திய வாரத்தில் அந்த எண்ணிக்கை 763 ஆக இருந்தது.

அதேபோல தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையும் 23லிருந்து 32க்கு அதிகரித்து உள்ளது.

இவ்விரண்டு எண்ணிக்கையும் இவ்வாண்டில் பதிவான ஆக அதிக வாராந்திர எண்ணிக்கை.

ஒப்புநோக்க, இதற்கு முன்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொவிட்-19 நோயாளிகளின் ஆக அதிக எண்ணிக்கை 460. அதேபோல தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்ந்தோரின் ஆக அதிக எண்ணிக்கை 9.

இந்த விவரங்களை வியாழக்கிழமை மாலை வெளியிட்ட சுகாதார அமைச்சு, வாராந்திர தொற்று நிலவரத்தையும் தெரிவித்தது.

டிசம்பர் 10ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையிலான வாரத்தில் கொவிட்-19 தொற்றுநோயால் 58,300 பேர் பாதிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டது. இந்த ஆண்டின் ஆக அதிக எண்ணிக்கை இது.

இதற்கு முந்திய வாரத்தில் 56,043 பேர் பாதிக்கப்பட்டனர்.

இருப்பினும், அன்றாடத் தொற்றுச் சம்பவங்களை மதிப்பிடும் ஏழு நாள் சராசரி விகிதம் அண்மைய நாள்களில் குறைந்து இருப்பதை அமைச்சின் இணையத்தளம் உணர்த்தியது.

டிசம்பர் 17ஆம் தேதி 7,730 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 18ஆம் தேதி 6,820 என்றும் அதற்கு மறுநாள் (டிசம்பர் 19) 6,530 என்றும் பதிவானது.

அதேபோல, மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின் விகிதம், மதிப்பிடப்பட்ட வாராந்திர நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையை விட பின்தங்கியுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

தொற்றுச் சம்பவங்கள் பொதுவாக அதிகரித்து வரும் நிலையில், கூட்டமான இடங்களுக்குச் செல்லும்போது பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு அமைச்சு கடந்த வாரம் வலியுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்