சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த மோட்டார்சைக்கிளோட்டிகள் இருவர் விபத்தில் பலி

சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த மோட்டார்சைக்கிளோட்டிகள் இருவர் விபத்தில் பலி

2 mins read
dde94a86-4a40-44c2-864e-57ea2cca9914
விபத்து நிகழ்ந்த இடத்தில் எடுக்கப்பட்ட படங்கள். - படங்கள்: மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையின் ஃபேஸ்புக்
Google News Preferred Icon

சிங்கப்பூரை நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்கள் இருவர் ஜோகூர் குடிநுழைவு அலுவலகம் அருகே நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தனர்.

தஞ்சோங் கூபாங் சுங்கக் கட்டடம் அருகே ஐந்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட அந்த விபத்து, வெள்ளிக்கிழமை (டிசம்பர் 22) காலை 6.04 மணிக்கு நிகழ்ந்தது.

இஸ்கந்தார் புத்ரி தீயணைப்பு, மீட்புத் துறையின் செயலாக்கத் தலைவர் ஹைருல்நிஸாம் முஹம்மது நோ இத்தகவல்களைக் கூறினார்.

விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் இரு தீயணைப்பு வாகனங்களுடன் பத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றதாக அவர் தெரிவித்தார்.

“நாங்கள் சென்று சேர்ந்தபோது ஐந்து வாகனங்கள் விபத்தில் சிக்கி இருந்தன. லாரி, இழுவை வாகனம், பேருந்து, இரு மோட்டார்சைக்கிள் ஆகியவை அந்த வாகனங்கள்.

“மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்களுள் ஒருவர் லாரியின் அடியில் சிக்கியிருந்தார்.

“லாரியைத் தூக்க, அதற்கான சாதனத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதனால், அந்த வழியாகச் சென்ற பாரந்தூக்கியின் உதவியை நாடினோம்,” என்று சம்பவம் பற்றி விவரித்தார் திரு ஹைருல்நிஸாம் .

இதற்கிடையே, இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் சிங்கப்பூரை நோக்கி சென்றுகொண்டு இருந்ததாக இஸ்கந்தார் புத்ரி வட்டார காவல்துறைத் தலைவர் ரஹ்மத் ஆரிஃபின் கூறினார்.

நிறுத்துவிசை (பிரேக்) வேலை செய்யாததால் கட்டுப்பாட்டை இழந்த லாரி, இழுவை வாகனம் மீதும் பேருந்து மீதும் மோதிய பின்னர் இரண்டு மோட்டார்சைக்கிள்களை நசுக்கியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார் அவர்.

49 வயதும் 54 வயதும் உடைய இரு மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதேநேரம் இழுவை வாகன ஓட்டுநர், பேருந்து ஓட்டுநர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த 29 பயணிகளுக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட திரு ரஹ்மத், உயிரிழந்தோரின் சடலங்கள் ஜோகூர் பாருவில் உள்ள சுல்தானா அமினா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடந்துவருவதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
சாலை விபத்து