சாங்கி உலகின் 5வது சுறுசுறுப்பான விமானநிலையம்; சிங்கப்பூர்-கோலாலம்பூர் ஆகச் சிறந்த வழித்தடம்

2 mins read
4ee7113c-595a-4c2f-9920-ffb7df6ce16e
சாங்கி விமான நிலையம். - கோப்புப் படம்: எஸ்பிஎச் மீடியா

உலகின் ஐந்தாவது சுறுசுறுப்பான அனைத்துலக விமான நிலையம் என்ற பெருமையை சாங்கி விமான நிலையம் பெற்றுள்ளது.

அத்துடன், சிங்கப்பூர்-கோலாலம்பூர் இடையிலான ஒரு மணி நேர பயணத்தடம் உலகின் ஆக சுறுசுறுப்பான விமான வழித்தடம் என்று தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதே வரிசையில், ஜகார்த்தா-சிங்கப்பூர் மற்றும் பேங்காக்-சிங்கப்பூர் விமானச் சேவை உலகின் தலைசிறந்த பத்து அனைத்துலக விமான வழித்தடங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

ஜகார்த்தா-சிங்கப்பூர் ஏழாம் இடத்திற்கும் பேங்காக்-சிங்கப்பூர் ஒன்பதாம் இடத்திற்கும் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

உலகப் பயணத் தரவுகளை வழங்கும் நிறுவனமான ‘ஓஏஜி ஏவியேஷன்’ வியாழக்கிழமை (டிசம்பர் 21) விமானப் பயணத் தரப் பட்டியலை வெளியிட்டது.

பயணத்திற்குத் திட்டமிடப்பட்ட விமானங்களின் அனைத்துலகப் பயண இருக்கைகளின் அடிப்படையில் கிடைத்த தகவல்களைப் பயன்படுத்தி தரவரிசை உருவாக்கப்பட்டு உள்ளது.

இவ்வாண்டில் 56,504,042 (56.5 மில்லியன்) இருக்கைகளுடன் துபாய் அனைத்துலக விமான நிலையம் பட்டியலின் முதலிடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டிலும் 2019ஆம் ஆண்டிலும் மொத்த இருக்கைகளின் அடிப்படையில் அது முதலிடத்தைப் பிடித்திருந்தது.

சாங்கி விமான நிலைய இருக்கைகளின் எண்ணிக்கை 36,136,334 (36.1 மில்லியன்).

தற்போது ஐந்தாம் இடத்திற்கு வந்துள்ள சாங்கி விமான நிலையம், கொவிட்-19க்கு முந்திய 2019ஆம் ஆண்டு நான்காம் இடத்தை வகித்தது. இருப்பினும், கடந்த (2022) ஆண்டு அது 8ஆம் இடத்துக்குச் சென்றது.

கடந்த ஆண்டு கணக்கிடப்பட்ட இருக்கைகளின் எண்ணிக்கை 21.7 மில்லியன். அதிலிருந்து 66 விழுக்காடு சாங்கி விமான நிலையம் முன்னேற்றம் கண்டுள்ளது.

இருப்பினும், 2019ஆம் ஆண்டில் பயணத்திற்குத் திட்டமிடப்பட்ட 42.5 மில்லியன் இருக்கை என்பதைக் காட்டிலும் தற்போதைய எண்ணிக்கை 15 விழுக்காடு குறைவு.

லண்டன் ஹீத்ரூ விமான நிலையம் இரண்டாம் இடத்தையும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

தென்கொரியத் தலைநகர் சோலில் இருக்கும் இஞ்சியோன் விமான நிலையம் ஏழாம் நிலையில் வந்தது.பட்டியலில் இடம்பெற்றுள்ள தலைசிறந்த 10 சுறுசுறுப்பான அனைத்துலக விமான வழித்தடங்களில் ஏழு ஆசிய பசிபிக் வட்டாரத்தில் உள்ளன.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலுக்குப்பின் தாமதமாக வழக்கநிலைக்குத் திரும்பியதன் காரணமாக உலகளவில் பின்தங்கி இருந்த இந்த வட்டாரம், மிக விரைவாக மீட்சி கண்டு வருவதை புதிய தரவரிசை உணர்த்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்