சிங்கப்பூர் ரோட்டரி சங்கத்தினர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருகையை முன்னிட்டு சிறார் புற்றுநோய் அறநிறுவனம், கனோஸியன் பள்ளிக் குழந்தைகளுக்கான சிறு பொழுதுபோக்கு நிகழ்வுகளுடன் இரவு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது.
கடந்த டிசம்பர் 13ஆம் தேதியன்று தங்ளின் கிளப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், ரோட்டரி உறுப்பினர்களுடன் சிறார் புற்றுநோய் அறநிறுவனத்திலிருந்து ஐந்து குழந்தைகள், அவர்களின் குடும்பத்தார், கனோசியன் பள்ளியைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஏறத்தாழ 6 வயது முதல் 19 வயது வரையிலான சிறார்கள் கலந்துகொண்ட இவ்விருந்தில் அவர்களுக்கான முக ஓவியம், கேன்வஸ் சித்திரம் வரைதல், திறன்பேசி விளையாட்டுப் போட்டி, கேரல் இசை ஆகிய அங்கங்கள் நடத்தப்பட்டன.
ரோட்டரி சங்கம் மூலம் சமூக சேவையில் ஈடுபட்ட இளையர்கள், குழந்தைகளுடன் நேரம் செலவிட்டதோடு சான்டா கிளாஸ் தோன்றிப் பரிசுப் பொருள்களை அளித்தது குழந்தைகளைப் பெரிதும் மகிழ்வித்தது. தொடர்ந்து இனிப்பு வகைகள், கேக், மிட்டாய்கள், பல்வேறு உணவு வகைகள் அடங்கிய விருந்தும் அளிக்கப்பட்டது.
இதுகுறித்துப் பேசிய ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த சோனாலி சின்ஹா, 51, “சமூக-உளவியல் ரீதியான ஆதரவு தேவைப்படும் குழந்தைகள், குடும்பங்களுக்காக இவ்வகை நிகழ்வுகள் நடத்துவதைப் பெருமையாகக் கருதுகிறோம்,” என்றார்.
கனோசியன் பள்ளி முதல்வர் கிறிஸ்டினா மைக்கேல் கூறுகையில், “எங்கள் பள்ளியைச் சேர்ந்த செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் வளர்ந்து சமூகத்தில் எல்லா விதமான மக்களுடனும் சேர்ந்துதான் வாழ வேண்டும். அதற்கான பயிற்சியாகவே இந்நிகழ்வைப் பார்க்கிறேன்,” என்றார்.
ரோட்டரி சங்கத்தின் மூலம் சமூகப் பணியில் ஈடுபட்டு வரும் 16 வயது இளைஞரான ராஜமோகன் ஷிவானி, “சமூகத்தின் எல்லா நிலையிலும் உள்ள மனிதர்கள் குறித்தும் அவர்களது வாழ்க்கை, சிரமங்கள், இன்பங்கள் என அனைத்தையும் நேரில் பார்ப்பது புது அனுபவமாக இருக்கிறது,” என்றார்.
ரோட்டரி சங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு உத்தம் கிருபலானி, 80, “சமூகத்தில் ஒருசில பிரிவினர் பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் எனும் உணர்வைத் தருவது முக்கியம்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“ரோட்டரி சங்கம் நடத்தும் பல்வேறு சமூக நிகழ்வுகளில் பங்காற்றியுள்ளேன். இம்முறை ஓர் ஆசிரியராக, குழந்தைகளுக்கு நிகழ்ச்சி ஒன்றை நடத்துவது கூடுதல் மகிழ்ச்சி,” என்றார் ராஃபிள்ஸ் பள்ளி ஆசிரியரும், ரோட்டரி உறுப்பினருமான ஜஸ்பீர் கோஹ்.