பல்லின சமத்துவத்தை உணர்த்திய கொண்டாட்டம்

பல்லின சமத்துவத்தை உணர்த்திய கொண்டாட்டம்

படம்: ராஜ்குமார்

24 Dec 2023 - 5:30 am

3 mins read

சிங்கப்பூரில் பல்லின சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அனைத்து சமய மன்றத்தின் (Inter-Religious Organization) இளையர் பிரிவினரும் மகளிர் பிரிவினரும் இணைந்து முஸ்லிம் சிறுநீரகச் செயல்பாட்டுக் கழகத்தில் 30 குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

சிறுநீரக பாதிப்புள்ள 15 முஸ்லிம் குழந்தைகள், இந்து, கிறிஸ்து, பௌத்தம், தாவோயிசம் உள்ளிட்ட இதர சமய நம்பிக்கைகள் கொண்ட 15 குடும்பங்கள், குழந்தைகள் எனப் பலரும் இணைந்து கடந்த டிசம்பர் மாதம் 16ஆம் தேதியன்று கிறிஸ்துமஸ் தினத்தை விமரிசையாகக் கொண்டாடினர்.

சிறப்பு இரவு விருந்துடன் இசை நிகழ்ச்சி, குழந்தைகளுக்குச் சிறு விளையாட்டுப் போட்டிகள் எனக் கேளிக்கைகள் நிறைந்த கொண்டாட்டமாக அமைந்தது. அனைத்து சமய மன்றத்தின் இளையர் பிரிவுத் தலைவர் சுகுல் ராஜ்குமார் ‘சாண்டா கிளாஸ்’ எனும் கிறிஸ்துமஸ் தாத்தாவாகத் தோன்றிப் பரிசளித்துக் குழந்தைகளைக் குதூகலத்தில் ஆழ்த்தினார்.

புரிதலை வளர்க்கும் சிங்கப்பூர் அனைத்து சமய மன்றம்

பல்வேறு இனத்தவரிடையே நட்புறவை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும், உலகின் பழமையான அனைத்து சமய அமைப்புகளில் ஒன்று 1949ல் தொடங்கப்பட்ட சிங்கப்பூர் அனைத்து சமய மன்றம்.

இந்து, யூதர், ஜோராஸ்ட்ரியன், பௌத்த, தாவோயிஸ்ட், ஜெயின், கிறித்துவ, முஸ்லிம், சீக்கிய, பஹாய் சமய மக்கள் எனப் பலரும் உறுப்பினர்களாக உள்ள இந்த அரசு சாரா அமைப்பு, தொடர்ந்து சமய நல்லிணக்க மேம்பாட்டிற்காக உழைத்து வருகிறது.

கிறிஸ்துமஸ் கொண்டாடிய இஸ்லாமிய நம்பிக்கை கொண்ட முஸ்லீம் சிறுநீரகச் செயல்பாட்டுக் கழகத்தின் பயனாளிகள்.
கிறிஸ்துமஸ் கொண்டாடிய இஸ்லாமிய நம்பிக்கை கொண்ட முஸ்லீம் சிறுநீரகச் செயல்பாட்டுக் கழகத்தின் பயனாளிகள். - படம்: ராஜ்குமார்

பதினெட்டு முதல் நாற்பது வயதுடைய ஏறத்தாழ 50-60 உறுப்பினர்களுடன் செயல்படும் அம்மன்றத்தின் இளையர் பிரிவு, தொடர்ந்து பல்லின பண்டிகைகளைக் கொண்டாடுவதன் மூலம் பரஸ்பர மரியாதையை ஏற்படுத்த முனைகிறது என்கிறார் அதன் தலைவர் சுகுல் ராஜ்குமார்.

அங்கு ஒரு சமயத்தவர், தங்கள் கருத்தைப் பிறரிடத்தில் திணிக்காமல், அடுத்தவர் நம்பிக்கையைக் காது கொடுத்துக் கேட்பதும், அவற்றை அறியப் பாராட்ட வேண்டுமென்ற உண்மையான உணர்வோடும் செயல்படுகின்றனர் என்றார் அவர்.

புதிய கண்ணோட்டத்தை விதைக்கும் அனைத்து சமய கொண்டாட்டங்கள்

பரந்த மனப்பான்மையுடன் இவ்வாறு கொண்டாடுவது கடந்த 60, 70களில் கூட பெருமளவு புழக்கத்தில் இல்லை. அது தற்போது சாத்தியமாகியிருப்பது மகிழ்ச்சி என்றார் முஸ்லிம் சிறுநீரகச் செயல்பாட்டுக் கழகத்தின் தலைவர் அமீர் அலி.

குழந்தைகள் எவ்வித வேறுபாடும் அறியாதவர்கள்; அவர்கள் வேறுபாட்டை உணராமலேயே வளர்வது அடுத்த தலைமுறையின் மனதில் சமத்துவத்தை வேரூன்றச் சிறந்த வழியாக இருக்குமெனக் கருதுகிறார் அமீர் அலி.

வெவ்வேறு சமய, இன பண்டிகைகளைக் கொண்டாடுவது, வேற்றுமைகளைக் களைவதோடு, பல்வேறு கலாசாரங்களுக்கிடையிலான ஒற்றுமைகளையும் உணர்த்துகிறது என்றார் ராஜ்குமார்.

“ஒவ்வொரு மதத்தவரிடமும் பிற மதத்தைக் குறித்து காலங்காலமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பத்தை மாற்றி, புதிய, தெளிவான பார்வையை ஏற்படுத்த இவ்வகை நிகழ்வுகள் உதவும்.

சமய நல்லிணக்க உணர்வை குழந்தைகளிடம் விதைத்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.
சமய நல்லிணக்க உணர்வை குழந்தைகளிடம் விதைத்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம். - படம்: ராஜ்குமார்

பிற சமயத்தைப் பற்றிய சிறு தவறான புரிதல்கூட, பெரும் விளைவுகளை ஏற்படுத்தலாம். அவற்றை கவனமாகக் கையாண்டு, அடுத்த தலைமுறையை ஒன்றிணைக்க இவ்வகை முன்னெடுப்புகள் உதவும்,” என்றார் ராஜ்குமார்.

இந்த வழியில் மதங்களின் நம்பிக்கைகள், மரபுகளைப் பற்றி அறிந்துகொள்வது மட்டுமல்லாமல், அவர்களது செயல்பாட்டின் மீதான புரிதல், நம்பிக்கை, நல்லெண்ணத்தை விதைப்பதோடு நீடித்த நட்புக்கு வழிவகுக்கிறது என்றார் அமீர் அலி.

பகிர்தலை உணர்த்துகிறது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம். நம்மிடம் இருந்தால் அதற்கு நன்றி சொல்வதோடு, இல்லாதோருக்கு உதவும் எண்ணத்தை குழந்தைகளிடத்தில் விதைக்கும் வண்ணம் இந்த நிகழ்வை நடத்தியது பெருமை எனக் குறிப்பிட்டார் ராஜ்குமார்.

குறிப்புச் சொற்கள்