தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘கொண்டாட்ட உணர்வைத் தருவது இசையே’

2 mins read
914d4c55-0826-4ddf-a0fc-eddc4abddba5
உயிர்த்துடிப்புடன் கூடிய குரலுக்கு சொந்தக்காரரான ராபர்ட் ஃபெர்னாண்டோ. - படம்: ராபர்ட் ஃபெர்னாண்டோ

முதல்முறையாக இவ்வாண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று எஸ்பிளனேட் அரங்கில் சிறப்பு இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார் 64 வயது ராபர்ட் ஃபெர்னாண்டோ.

பெரும் சாதனைகளைப் புரிய வேண்டும், பிரபல இசைக் கலைஞராக வேண்டும் என எவ்வித இலக்குமின்றி இசை மீது தீரா மோகம் கொண்ட ஒரே காரணத்தினால் இசையைத் தொழிலாக மேற்கொள்ளத் தொடங்கியதாகக் குறிப்பிட்டார் ராபர்ட்.

அந்த மோகம், தன்னை இதுவரை கொண்டு வந்திருப்பதாகச் சொல்லும் இவர், சிங்கப்பூர் அதிபர்கள், அமைச்சர்கள் முன்னிலையில் படைக்கத் தொடங்கி, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

ஆழமான உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கும் குரலுக்குச் சொந்தக்காரரான இவர், பண்டிகைக்கான புத்துணர்வை இசைதான் தருகிறது என்றார்.

சுயமாகவே இசை கற்று முண்ணனி இசைக் கலைஞர் வரிசையில் இடம் பிடித்துள்ளார் ராபர்ட்.
சுயமாகவே இசை கற்று முண்ணனி இசைக் கலைஞர் வரிசையில் இடம் பிடித்துள்ளார் ராபர்ட். - படம்: தினே‌ஷ் குமார்

இன்னும் சில மாதங்களில் தனது 65வது வயதில் அடியெடுத்து வைக்கவிருக்கும் இவர், குடும்பப் பொறுப்புகள் குறைந்துவிட்டதாலும் தனது இசை மூலம் அன்பெனும் உணர்வை மக்களிடம் கொண்டு செல்லும் ஆவலின் காரணமாகவும் இவ்வாண்டு முதல்முறையாக கிறிஸ்துமஸ் தின இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளதாகச் சொல்கிறார். இதன் மூலம் மக்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய உணர்வு ஏற்படும் எனவும் நம்புகிறார்.

ஆர்வத்தின் பேரில் சுயமாகவே இசை கற்றவர் இவர்.

தேசிய சேவை காலகட்டத்தில் இவரது திறனைக் கண்டுகொண்ட அவரது சார்ஜண்ட், இவரை இசைக் குழுவில் இணைய ஊக்குவித்துள்ளார். தொண்டு நிறுவனத்திற்காக முதல் நிகழ்வை சுமார் 60 பேர் முன்னிலையில் நிகழ்த்திய இவர், பின்னர் பல நிகழ்வுகளில் பங்கேற்கத் தொடங்கினார்.

தொடர்ந்து பல ஊக்குவிப்புகள் வந்தாலும், ‘இசை வருமானத்தை ஈட்டித் தராது’ என்பது போன்ற அறிவுரைகளை ஏற்று உணவுத்துறையில் பணியாற்றத் தொடங்கினார்.

தனது 40வது வயதில் மனதுக்கு நிறைவான பணியைச் செய்ய விரும்பி, இசையை முழுநேரமாக மேற்கொள்ளத் தொடங்கினார் ராபர்ட்.

முதல்முறையாக கிறிஸ்துமஸ் நாளன்று இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார் ராபர்ட், 64.
முதல்முறையாக கிறிஸ்துமஸ் நாளன்று இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார் ராபர்ட், 64. - படம்: ராபர்ட் ஃபெர்னாண்டோ

தனது 48வது வயதில் முதன்முதலாகத் தனியே இரண்டு மணிநேர இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, மொத்த அரங்கையும் தம் கட்டுக்குள் வைத்திருந்ததைப் பெருமையாகத் தாம் கருதுவதாகக் கூறினார் ராபர்ட்.

‘வாழ்க்கை 40ல் தொடங்குகிறது’ எனும் ஆங்கிலப் பழமொழிக்குச் சான்றாக விளங்கும் இவர், விரும்பியதைத் தொழிலாக மேற்கொள்வது வருமானம் ஈட்டித் தராது எனும் கூற்று முற்றிலும் பொய் என்றார்.

இசை உள்ளிட்ட எந்தக் கலைத் துறையையும் மேற்கொள்ள விரும்புவோர், புகழையும் பணத்தையும் மட்டும் எதிர்பார்த்திருப்பதைவிட, கலை மேல் கொண்ட ஈடுபாட்டில் கவனம் செலுத்துவது முக்கியம் என்கிறார். அந்த ஈடுபாடு நாளடைவில் அதிர்ஷ்டம், பெருமை, புகழ், பணம் என எல்லாவற்றையும் ஈட்டித் தரும் என்று ஆலோசனை கூறினார் ராபர்ட்.

குறிப்புச் சொற்கள்