ஆள் அரவமற்று வெறிச்சோடிக் கிடக்கும் டர்ஃப் சிட்டி

ஆள் அரவமற்று வெறிச்சோடிக் கிடக்கும் டர்ஃப் சிட்டி

2 mins read
49087952-5083-4167-8529-c056f48ca55d
டர்ஃப் சிட்டியில் உள்ள ‘தி கேஜ்’ விளையாட்டுப் பூங்காவின் தற்போதைய நிலை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஒரு காலத்தில் மக்கள் பலர் வருவதும் போவதுமாக இருந்த இடமாகவும் காற்பந்தாட்டங்கள் பல நடைபெற்ற இடமாகவும் டர்ஃப் சிட்டியில் உள்ள ‘தி கேஜ்’ துடிப்புடன் காணப்பட்டது.

ஆனால், அங்குள்ள ஏழு காற்பந்துத் திடல்கள் தற்போது வெறிச்சோடிக் கிடக்கின்றன.

கடந்த பத்து ஆண்டுகளாக டர்ஃப் சிட்டியின் உயிர்த்துடிப்பாக ‘தி கேஜ்’ திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புக்கிட் தீமா வட்டாரத்தில் உள்ள டஃர்ப் சிட்டி ஏறத்தாழ 200 காற்பந்துத் திடல்கள் பரப்பளவைக் கொண்டது.

ரக்பி, வலைப்பந்து, மிதிவண்டி ஓட்டுதல் போன்ற விளையாட்டுகளுக்காக அங்கு முன்பு பலர் திரண்டனர்.

ஆனால், அங்கு இவ்வளவு காலம் செயல்பட்டு வந்த வர்த்தகர்களில் பெரும்பாலானோர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இம்மாதம் 31ஆம் தேதிக்குள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிடுமாறு அதிகாரிகள் அவர்களைக் கேட்டுக்கொண்டனர்.

குடியிருப்புப் பகுதியாக டர்ஃப் சிட்டி மேம்படுத்தப்பட இருக்கிறது.

அத்துடன், அப்பகுதியில் எம்ஆர்டி நிலையம் ஒன்றை கட்டவும் நிலப் போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டிலிருந்து டர்ஃப் சிட்டியில் செயல்பட்டு வந்த வர்த்தகர்களுக்கு இரண்டு முறை தொடர்ச்சியாக 18 மாத வாடகைக் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இவர்கள் வேறு இடங்களில் செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவர்களுக்குக் கூடுதல் இடமாற்றத் தெரிவுகள் வழங்கும் வகையில் 20க்கும் மேற்பட்ட புதிய இடங்களை பொது ஏலக்குத்தகை மூலம் அரசாங்கம் வழங்கியதாக சிங்கப்பூர் நில ஆணையம், ஸ்போர்ட் சிங்கப்பூர், நகர மறுசீரமைப்பு ஆணையம் டிசம்பர் 21ஆம் தேதியன்று தெரிவித்தன.

டிசம்பர் 31ஆம் தேதி காலக்கெடுவை முன்னிட்டு, 75 விழுக்காட்டுக்கும் அதிகமான வர்த்தகர்கள் தங்கள் தொழில்களுக்காகப் புதிய இடங்களைத் தேடியுள்ளனர்.

விளையாட்டு வசதிகள் பெருந்திட்டத்தின்கீழ் உள்ள உத்திகளுக்கு ஏற்ப, பொது விளையாட்டு வசதிகளையும் தாண்டி விளையாட்டு இடங்களின் கட்டமைப்பை அதிகரிக்கத் திட்டமிடுவதாக ஸ்போர்ட் சிங்கப்பூர் கூறியது.

அவ்வாறு செய்ய, தகுந்த அமைப்புகளுடன் அணுக்கமாகப் பணியாற்றிவருவதாக அது சொன்னது.

இருப்பினும், பலர் சென்றுகொண்டிருந்த டர்ஃப் சிட்டி போன்ற அனைத்து விளையாட்டுகளும் அடங்கிய ஒரு விளையாட்டு இடம் இனி கிடைப்பது சிரமம் என்றார் ‘சென்டார்ஸ் குரூப்’இன் தலைமை நிர்வாகியும் நிறுவனருமான டிம் லேம்பர்ட். அவரது நிறுவனம் 2003ஆம் ஆண்டிலிருந்து டர்ஃப் சிட்டியில் இயங்கிவந்தது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்