வரும் 31ஆம் தேதியன்று 28 சிங்கப்பூர் குடியிருப்புப் பேட்டைகள் புத்தாண்டை வரவேற்க ஆயுத்தமாகி வருகின்றன. அதில் 70,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
மக்கள் கழக அடித்தள அமைப்புகளின் ஏற்பாட்டில் நடக்கவிருக்கும் இந்த புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், பலதரப்பட்ட நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ளது. கேளிக்கை விளையாட்டுகள், மகிழவைக்கும் கலாசார நிகழ்ச்சிகள், ஆடை அலங்கார அணிவகுப்பு போன்ற நடவடிக்கைகள் இடம்பெற உள்ளன.
புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது மட்டுமல்லாது, 2024ஆம் ஆண்டுக்கான தங்களது இலக்குகளை சமூக ஒருங்கிணைப்புடன் வகுக்க குடியிருப்பாளர்களை ஊக்குவிக்கிறது இந்த கொண்டாட்டம்.
குடியிருப்புப் பேட்டைகள் சிலவற்றில் சுவாரசியமான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
வரும் 30ஆம் தேதி கேம்பிரிட்ஜ் பூங்காவில் குடியிருப்பாளர்களுக்கு டுரியான் விருந்தோடு, மாயவித்தை நிகழ்ச்சியும் மேலும் பல விளையாட்டுகளும் இடம்பெறவுள்ளன. அண்டை வீட்டாரிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
அதே நாளன்று, செல்லப்பிராணிகளுக்கான சிறப்புப் புத்தாண்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஃபேரர்-லீடன் குடியிருப்பாளர் கட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
செல்லப்பிராணிகளுக்கான சிகை அலங்காரச் சேவைகள், கீழ்ப்படிதல் பயிற்சிகள், கைவினைப் பொருள்கள் செய்யும் நடவடிக்கை போன்றவை அங்கு இடம்பெறும். மேலும், செல்லப்பிராணிகளுக்கான ஆடை அலங்காரப் போட்டியும் நடைபெறும்.
செல்லப்பிராணி உரிமையாளர்கள் சமூகப் பிணைப்பை நிலைநாட்டி, செல்லப்பிராணிகளை எப்படிப் பொறுப்புடன் வளர்க்கலாம் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் அறியலாம்.
தொடர்புடைய செய்திகள்
டிசம்பர் 31ஆம் தேதி, தஞ்சோங் பகார் - தியோங் பாரு வட்டாரத்தில் அடித்தளத் தலைவர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் தொண்டூழியர்களுடன் புத்தாண்டை கோலாகலமாக வரவேற்க ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இருபது ஆண்டுகளாக நடக்கும் இந்த விருந்து நிகழ்ச்சியில் ஆடல், பாடல், விளையாட்டுகள் நடைபெற உள்ளன. வருடாந்திர நிகழ்வான இந்த விருந்து, சமுக ஒற்றுமையை வலுப்படுத்த உதவுகிறது.
புத்தாண்டு கொண்டாட்டங்களைப் பற்றிய மேல்விவரங்கள் அறிய பொதுமக்கள் அருகில் உள்ள சமூக மன்றங்கள், வசிப்போர் குழு, அக்கம்பக்க வட்டாரக் குழுக்கள் மற்றும் குடியிருப்பாளர் கட்டமைப்புகளை நாடலாம்.

