தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$41,000 பொருள்களை திருடிய வியட்னாமிய மாணவருக்கு சிறை

1 mins read
d3fd53a9-ef18-4ca2-b725-b958a3e90bcf
மாணவர் திருடிய பொருள்களில் மடிக்கணினிகளும் ஐபேட் கைக்கணினிகளும் அடங்கும்.  - கோப்புப் படம்: இணையம்

ஏஸ்டார் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையத்திலும் ஆப்பிள் நிறுவனத்திலும் $41,000 பெறுமான பொருள்களைத் திருடிய வியட்னாமிய பல்கலைக்கழக மாணவருக்கு 11 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

அவர் திருடிய பொருள்களில் மடிக்கணினிகளும் ஐபேட் கைக்கணினிகளும் அடங்கும்.

லி வியட் ஹோவாங் எனப்படும் அந்த 22 வயது மாணவர், போனவிஸ்தாவின் இன்னோவிஸ் கட்டடத்தில் அமைந்துள்ள ஏஸ்டார் அலுவலகத்தில் உள்ளகப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திருட்டில் ஈடுபட்டார்.

இரு திருட்டுக் குற்றச்சாட்டுகள் மற்றும் அத்துமீறி வீடுபுகுந்ததாக இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வியாழக்கிழமை (டிசம்பர் 28) அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

திருடிய பொருள்களை விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கைச்செலவுக்கும் வியட்னாமில் உள்ள தமது குடும்பத்துக்கு அனுப்பவும் அந்த மாணவர் திட்டமிட்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

திருடிய பொருள்கள் சிலவற்றை ஆப்பிள் அலுவலகத்தில் திருப்பிக் கொடுக்க முயன்றபோது அவர் பிடிபட்டார்.

இவ்வாண்டு ஜூனுக்கும் ஜூலைக்கும் இடைப்பட்ட காலத்தில், தமது அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவரும் வீட்டுக்குச் செல்லும் வரை காத்திருந்து மின்னணு சாதனங்களை அந்த மாணவர் திருடினார்.

விலைமதிப்புள்ள பொருள்கள் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் அலுவலகப் பகுதிகளை எப்படித் திறப்பது என்பதை அவர் கற்றுக்கொண்டு இருந்ததாக அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் விஷ்ணு மேனன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்