தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூரில் விபத்தில் சிக்கிய சிங்கப்பூர் பேருந்து: பெண்கள் உள்ளிட்ட மூவர் காயம்

1 mins read
8605ca0d-fc13-4c89-8e0d-2628b9e67538
கூலாய் அருகே நெடுஞ்சாலையில் புதன்கிழமை விடியற்காலை விபத்தில் சிக்கிய பேருந்து. - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

சிங்கப்பூரில் இருந்து சென்ற சுற்றுலாப் பேருந்து ஒன்று மலேசிய ஜோகூர் நெடுஞ்சாலையில் சறுக்கி கவிழ்ந்ததில் மூவர் காயமடைந்தனர்.

புதன்கிழமை (டிசம்பர் 27) விடியற்காலை மலேசியாவின் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் அவ்விபத்து நிகழ்ந்தது.

விபத்து நடந்தபோது பயணிகள் பலரும் உறக்கத்தில் இருந்ததாக ஜெரமி சுவா, 27, என்னும் பயணி கூறினார். விபத்தில் அவரது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

சிங்கப்பூரரான அவர் தமது காதலியான சாண்டர் டுன், 26, என்பவருடன் கோலாலம்பூருக்கு சுற்றுலா செல்ல பேருந்தில் பயணமானார்.

விடியற்காலை 3.54 மணிக்கு கூலாய் அருகே உள்ள ஜோகூர் நெடுஞ்சாலையில் அந்தப் பேருந்து திடீரென்று சறுக்கியது.

“எனக்கு ஏற்பட்ட காயம் பொறுத்துக்கொள்ளக்கூடியது. ஆயினும், நானும் உறங்கிக்கொண்டு இருந்ததால் திடீரென்று ஏற்பட்ட விபத்தால் அதிர்ச்சி அடைந்தேன்,” என்றார் திரு சுவா.

“விபத்து நிகழ்ந்த வேளையில் மழை பலமாகப் பெய்துகொண்டு இருந்தது. பயணிகள் பேருந்தில் இருந்து வெளியேற ஓட்டுநர் உதவிக்கொண்டு இருந்தார்.

“ஓட்டுநருக்குப் பின்னால் இருந்து முதல் வரிசை இருக்கையில் இருந்த நான் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி நொறுங்கியதைக் கண்டேன்,” என்றும் திரு சுவா தெரிவித்தார்.

காயமடைந்த மற்ற இருவரும் பெண்கள். அவர்களில் ஒருவருக்குக் கழுத்திலும் மற்றவருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டன.

அந்தப் பேருந்தில் நான்கு குழந்தைகள் உட்பட 37 பேர் இருந்ததாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
விபத்து