தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தம்மைப் போலக் காட்டும் போலி காணொளி குறித்து பிரதமர் லீ எச்சரிக்கை

2 mins read
5db5a240-e11e-473f-96a5-b9e76b55d67f
பிரதமர் லீ போலக் காட்டும் போலி காணொளி படம். - படம்: பிரதமரின் ஃபேஸ்புக்

‘டீப்ஃபேக்’ எனப்படும் புதுவகை ஆள்மாறாட்ட மோசடிகளில் இருந்து சிங்கப்பூரர்கள் தங்களையும் தங்களது அன்புக்குரியவர்களையும் பாதுகாக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) தமது ஃபேஸ்புக் பதிவில் காணொளி ஒன்றை இணைத்து உள்ளார்.

சீனாவின் பெய்ஜிங்கைத் தளமாகக் கொண்ட ‘சைனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க்’ என்னும் செய்தித்தளத்திற்கு திரு லீ பேட்டி கொடுப்பதைப் போலவும் மின்னிலக்க நாணய முதலீட்டுத் திட்டம் ஒன்றின் தொடர்பில் அவர் சில ஆலோசனைகளை தெரிவிப்பதுபோலவும் அந்தக் காணொளியில் போலியாக இடம்பெற்று உள்ளது.

“மோசடிக்காரர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படங்களையும் குரலையும் மாற்றுகின்றனர்.

“நமது அதிகாரத்துவ நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட உண்மையான படங்களைப் போலியாக உருமாற்றி, நாம் சொல்லாதவற்றை சொல்லியதுபோல போலி காணொளிகளைத் தயாரிக்கிறார்கள்,” என்று பிரதமர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்று தெரிவிப்பது போன்ற போலி காணொளிகளைப் பெறுவோர் அதனைப் பொருட்படுத்த வேண்டாம் என்று அவர் பொதுமக்களை வலியுறுத்தி உள்ளார்.

யாரேனும் இதுபோன்ற மோசடி காணொளி, போலியான செய்தி மற்றும் போலியான விளம்பரங்களைக் கண்டால் அதுபற்றி அதிகாரத்துவ ‘ஸ்கேம்ஷீல்ட் பாட்’டின் வாட்ஸ்அப் வழியாகப் புகார் அளிக்கலாம் என்றும் திரு லீ தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

“டீப்ஃபேக் எனப்படும் ஆள்மாறாட்டத் தொழில்நுட்பம் மூலம் பொய்த்தகவல்களைப் பரப்பும் செயல் இனியும் தொடர்ந்து பெருகும் ஆபத்து உள்ளது,” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அண்மையில் அதுபோன்ற மோசடி காணொளி ஒன்று, துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கை இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்புச் சொற்கள்