2024ல் ஜிஎஸ்டி உயர்வைச் சமாளிக்க 950,000 குடும்பங்களுக்கு தள்ளுபடிகள்

2024ல் ஜிஎஸ்டி உயர்வைச் சமாளிக்க 950,000 குடும்பங்களுக்கு தள்ளுபடிகள்

2 mins read
5a48bf5d-a688-417a-be78-8fecb16aba22
தகுதிபெறும் குடும்பங்கள் 2024 ஜனவரியில் கூடுதலாக அரை மாத சேவை, பராமரிப்புக் கட்டணக் கழிவைப் பெறும் என்று நிதி அமைச்சு குறிப்பிட்டது. - கோப்புப் படம்: பிஸினஸ் டைம்ஸ்

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (கழக ) வீடுகளில் வசிக்கும் கிட்டத்தட்ட 950,000 சிங்கப்பூர் குடும்பங்கள் 2024ல் நடப்புக்கு வரவுள்ள பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்வு, கரிம வரி, தண்ணீர்க் கட்டண அதிகரிப்பு ஆகியவற்றைச் சமாளிப்பதற்கான தள்ளுபடிகளை ஜனவரி மாதம் பெறுவார்கள்.

ஜனவரியில், குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்கள் வழக்கமான யு-சேவ் தள்ளுபடியைவிட இருமடங்கு அதிகமாகப் பெறுவார்கள்.

அத்துடன் கூடுதலாக $20 பொதுப் பயனீட்டுக் கட்டணத்தில் கழிவு பெறுவார்கள் என்று வெள்ளிக்கிழமை நிதி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த கூடுதல் வழங்கீடுகள் ஜனவரி 2024 முதல் டிசம்பர் 2025 வரை காலாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும். துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் செப்டம்பரில் அறிவித்த 1.1 பில்லியன் வாழ்க்கைச் செலவின ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தின்படி, ஒவ்வொரு குடும்பத்துக்கு ஈராண்டுகளில் $160க்கும் அதிகமாகக் கிடைக்கும்.

2023க்கான யு-சேவ் தள்ளுபடிகள், சராசரியாக ஓரறை, ஈறறை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு ஏறக்குறைய எட்டு முதல் 10 மாதங்கள் வரையிலான பொதுப் பயனீட்டுக் கட்டணத்தை ஈடுசெய்யும் என்று நிதி அமைச்சு கூறியது.

மூவறை, நான்கறை வீவக வீடுகளுக்கு கிட்டத்தட்ட நான்கு முதல் ஆறு மாத பொதுப் பயனீட்டுக் கட்டணத்தை ஈடுசெய்யப் போதுமானதாக இருக்கும்.

ஜனவரி மாதத்தில் யு-சேவ் தள்ளுபடி வழங்கீடு நான்காவதும் 2023க்கான இறுதி விநியோகமும் ஆகும்.

மேலும் தகுதிபெறும் குடும்பங்கள் 2024 ஜனவரியில் கூடுதலாக அரை மாத சேவை, பராமரிப்புக் கட்டணக் கழிவைப் பெறும் என்று நிதி அமைச்சு குறிப்பிட்டது.

கரிம வரி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வுபோன்ற காரணங்களால் அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள் உயரும் என்றும் வெள்ளிக்கிழமை அமைச்சு அறிவித்தது.

ஜனவரி 1 முதல் சிங்கப்பூர் ஜிஎஸ்டி 8 விழுக்காட்டிலிருந்து 9 விழுக்காட்டுக்கு உயரும்.

யு-சேவ் தள்ளுபடிகள் எஸ்பி சர்வீசுடன் குடும்பங்களின் பயனீட்டுக் கணக்குகளிலும் நகர மன்றங்கள் நிர்வகிக்கும் சேவை, பராமரிப்புக் கணக்குகளிலும் நேரடியாக வரவு வைக்கப்படும்,

குடும்பங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை.

இந்தத் திட்டங்களிலிருந்து அனுகூலம் பெறுவதற்கு குடும்பங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை.

குறிப்புச் சொற்கள்