மின்சார, எரிவாயுக் கட்டணங்கள் உயருகின்றன

2 mins read
ef5f118d-8de6-4715-901a-5ed9562a749c
ஜிஎஸ்டி உயர்வதும் கட்டண உயர்வுக்கான ஒரு காரணம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் எரிவாயு மற்றும் மின் கட்டணங்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு உயரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கரிம வெளியேற்றத்துக்கான வரி உயர்வு, அதிகரிக்கும் பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் எரிசக்திச் செலவுகள் இந்த கட்டண உயர்வுக்குக் காரணங்களாக சொல்லப்படுகிறது.

அதன்படி, ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை எஸ்பி குழுமம் வீடுகளுக்கு விநியோகிக்கும் மின்சாரக் கட்டணம் ஐந்து விழுக்காடு உயரும்.

அதாவது, ஒரு கிலோவாட் மணி நேரத்துக்கு 32.58 காசுகள் என அதிகரிக்கும். அது தற்போது 31 காசுகளாக உள்ளது.

அதேபோல, எரிவாயுக் கட்டணம் 4 காசு உயரும்.

குழாய் வழி எரிவாயு விநியோகிக்கும் ‘சிட்டி எனர்ஜி’ யின் கட்டணப்படி, ஒரு கிலோவாட்டுக்கு தற்போது 24.21 காசுகளாக இருக்கும் எரிவாயுக் கட்டணம் அடுத்த மூன்று மாதங்களுக்கு 25.23 காசுகள் அதிகரிக்கும்.

மின்சார சில்லறை வர்த்தகர்களுடன் நிலையான கட்டணத் திட்டத்தை மேற்கொண்டு இருக்கும் மின் பயனீட்டாளர்கள், அவர்களின் குத்தகை புதுப்பிக்கப்படும் வரை அவர்களுக்கான மின் கட்டணத்தில் எந்தவொரு மாற்றமும் இருக்காது.

கட்டண உயர்வுகளை எரிசக்திச் சந்தை ஆணையம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) அறிவித்தது.

தற்போது 8 விழுக்காடாக இருக்கும் ஜிஎஸ்டி, 2024 ஜனவரி முதல் 9 விழுக்காட்டுக்கு உயருகிறது. அதேபோல, கரிம வெளியேற்றத்திற்கான வரி டன் ஒன்றுக்கு $5 என்றிருப்பது $25ஆக அதிகரிக்க உள்ளது.

கரிம வெளியேற்ற வரி உயர்வதால் நான்கறை வீவக வீடு ஒன்றின் மாதாந்திர பயனீட்டுக் கட்டணத்தில் $4 ஏற்றம் இருக்கும் என்று தேசிய பருவநிலை மாற்றத்துக்கான தலைமைச் செயலகம் இந்த மாதம் முன்னுரைத்து இருந்தது.

வரி உயர்வை முழுமையாக பயனீட்டாளரையே ஏற்கச் செய்யும் சூழலில் அந்த அளவுக்கு ஏற்றம் இருக்கலாம் என கணிப்பின் அடிப்படையில் அது அவ்வாறு கூறி இருந்தது.

குறிப்புச் சொற்கள்