ரயில் கதவுகளைப் பலவந்தமாகத் திறக்க முயன்றவர் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு

1 mins read
c86c24b8-eaa2-4596-873a-3a83dc6bc548
வனேசா வாங் ஸி குயி, 47, எனப்படும் பயணி பொதுமக்களுக்குத் தொல்லை தரும் வகையில் நடந்ததாக புதிய குற்றச்சாட்டு கூறுகிறது. - படம்: சமூக ஊடகம்

எம்ஆர்டி ரயிலின் உள்ளிருந்து வலுக்கட்டாயமாக அதன் கதவுகளை பயணி ஒருவர் திறப்பதைக் காட்டும் காணொளி வெளியானதைத் தொடர்ந்து, அந்தப் பயணி மீது வெள்ளிக்கிழமை மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது.

வனேசா வாங் ஸி குயி, 47, எனப்படும் அவர், பொதுமக்களுக்குத் தொல்லை கொடுத்ததாக மூன்று குற்றச்சாட்டுகளையும் தாக்குதலில் ஈடுபட்டதாக ஒரு குற்றச்சாட்டையும் தற்போது எதிர்நோக்குகிறார்.

டிசம்பர் 1ஆம் தேதி காலை 11 மணியளவில் இயோ சூ காங் எம்ஆர்டி நிலையத்தில் ரயில் ஒன்றின் கதவுகளை வாங் இழுத்துத் திறக்க முயன்ற செயல் பயணிகளுக்கு தொல்லை தரும் வகையில் இருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

சம்பவத்தின்போது ரயில் நகர்ந்துகொண்டு இருந்ததா என்பது பற்றி ஆவணங்கள் தெரிவிக்கவில்லை.

வாங் மீது ஏற்கெனவே இதேபோன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருந்தன. நவம்பர் 27ஆம் தேதி பிராடல் எம்ஆர்டி நிலையத்திலும் நவம்பர் 29ஆம் தேதி அங் மோ கியோ எம்ஆர்டி நிலையத்திலும் ரயில் கதவுகளை அவர் பலவந்தமாகத் திறக்க முயன்ற குற்றம் தொடர்பானவை அவை.

மேலும், நவம்பர் 29ஆம் தேதி அங் மோ கியோ எம்ஆர்டி நிலையத்தில் ஆடவர் ஒருவரின் காலில் உதைத்த குற்றத்தையும் அவர் செய்தார்.

குறிப்புச் சொற்கள்