சிங்கப்பூர் கப்பலுடன் விபத்து; சீன மீன்பிடிப் படகு ஊழியர்கள் எண்மரைக் காணவில்லை

1 mins read
4d7f42d9-7444-4f3a-8674-7ea2f90832ef
சிங்கப்பூர் கப்பல் ஊழியர்கள் விசாரணைக்கு உதவிவரும் வேளையில் ‘ஷிடாவ் ஆங்கராஜ்’ல் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. - காணொளிப் படம்: MARINE TRAFFIC.COM

சீனாவில் டிசம்பர் 26ஆம் தேதி நள்ளிரவு சீன மீன்பிடிப் படகின்மீது சிங்கப்பூர் கப்பல் ஒன்று மோதியது.

விபத்தின் காரணமாக அந்தப் படகு மூழ்கியதில் அதிலிருந்த எட்டு ஊழியர்களைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது.

சீன கடல்துறைப் பாதுகாப்பு நிர்வாகத்திடம் இருந்து இந்த விபத்து பற்றி தான் அறிந்ததாக சிங்கப்பூர் கடல்துறை துறைமுக ஆணையம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

‘பெர்ல் கென்ஸோ’ எனும் அக்கப்பல், வடகிழக்கு சீனாவில் பெங்லாயில் இருந்து கிழக்கு சீனாவில் ஸொவ்ஷானுக்குச் சென்றுகொண்டிருந்தது.

செங்ஷான் ஜியாவ் அருகே சிங்கப்பூர் நேரப்படி நள்ளிரவு 12.08 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்தது.

“கப்பலில் இருந்த ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்,” என்று தெரிவித்த ஆணையம், விபத்து நிகழ்ந்த பகுதியில் மாசுபாடு எதுவும் தென்படவில்லை எனக் கூறியது.

சீன அதிகாரிகள் தேடுதல், மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். சிங்கப்பூர் கப்பல் ஊழியர்கள் விசாரணைக்கு உதவிவரும் வேளையில் ‘ஷிடாவ் ஆங்கராஜ்’ல் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
விபத்துகப்பல்