கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும் சிங்கப்பூரில் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் ‘டெலிகிராம்’ சமூக ஊடகத் தளம் வாயிலாக மூன்றாண்டுகளாக அதிகரித்து வருகிறது.
இதனை வனவிலங்கு நலன் ஆராய்ச்சி மற்றும் கல்விச் சங்கம் (ஏக்கர்ஸ்) கண்டறிந்துள்ளது.
தடை செய்யப்பட்ட ஏராளமான வனவிலங்குகள் அந்தத் தகவல் சேவைத் தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது ஏக்கர்ஸுக்குத் தெரிய வந்தது.
மேலும், அந்த எண்ணிக்கை 2021ஆம் ஆண்டைக் காட்டிலும் 2023ஆம் ஆண்டில் இருமடங்காக அதிகரித்தது.
2023ஆம் ஆண்டில் அத்தகைய 660 சம்பவங்கள் பதிவாகின. 2021ல் அந்த எண்ணிக்கை 333ஆக இருந்ததாக ஏக்கர்ஸின் டிசம்பர் மாத அறிக்கை தெரிவித்தது.
அதேபோல தடை செய்யப்பட்ட வனவிலங்குகளை விற்போரின் எண்ணிக்கையும் 66லிருந்து 387க்கு அதிகரித்துவிட்டது.
இந்திய நட்சத்திர ஆமைகள், தேள்கள் போன்றவற்றுக்கு டெலிகிராம் தளத்தில் மிகவும் அதிகமான தேவை இருந்தது.
குறிப்பாக, 2021ஆம் ஆண்டு இந்திய நட்சத்திர ஆமைகளை விற்பனைக்கு விட்டு 4 விளம்பரங்கள் வெளியிடப்பட்ட நிலையில், 2023ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 21க்கு அதிகரித்தது.

