தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாவி கிடைத்த பின்னரும் புதிய வீட்டில் குடியேற இயலாமல் சிலர் அவதி

2 mins read
51380215-8484-47f6-aed4-3a236b6dbcf8
புதிய வீட்டுக்கான சாவி கொடுக்கப்பட்டதில் இருந்து மேலும் நான்கு வாரங்கள் வரை குடியிருப்பாளர்கள் காத்திருக்க வேண்டி இருக்கும் என்று சொல்லப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் மேற்கு வட்டார தெங்கா நகரில் புதிய வீடுகளுக்கான சாவிகளைப் பெற்றவர்களில் ஒருசிலர் தங்கள் விருப்பப்படி உடனடியாகக் குடியேற இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது.

‘பிளாண்டேஷன் ஏக்கர்ஸ்’ என்னும் பிடிஓ அடுக்குமாடிக் குடியிருப்பில் அமைந்துள்ள சில வீடுகளுக்கு புதிய தொழில்நுட்பத்திலான குளிரூட்டிகளை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதே அதற்குக் காரணம்.

புதிதாக வாங்கிய வீட்டில் தமது விருப்பப்படி குடியேற இயலாதவர்களில் திருவாட்டி டான், 49, என்பவரும் ஒருவர்.

கடந்த நவம்பர் மாதம் தனது புதிய ஐந்தறை வீட்டுக்கான சாவியைப் பெற்றுக்கொண்ட அவர், தமக்கு ஏற்பட்டிருக்கும் சிரமத்தை ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளிடம் விவரித்தார்.

“புதிய குளிரூட்டியை எங்கள் வீட்டில் பொருத்த இன்னும் இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை ஆகும் என எஸ்பி குழுமம் தெரிவித்துவிட்டது.

“சீனப் புத்தாண்டுக்கு முன்னர் புதிய வீட்டில் குடியேற விரும்பினோம். ஆனால், அந்தக் கனவு நிறைவேறவில்லை.

“குளிரூட்டி பொருத்தப்பட்ட பின்னரே நாங்கள் எங்களுக்குத் தேவையான சீரமைப்புப் பணிகளைச் செய்ய வேண்டிய நிலை உள்ளது,” என்றார் திருவாட்டி டான்.

தெங்கா நகரில் புதிய குளிரூட்டி சாதனங்கள் பொருத்தும் பணியை எஸ்பி குழுமம் நிர்வகித்து வருகிறது. அதன்படி அங்கு மையப்படுத்தப்பட்ட குளிரூட்டும் முறையில் செயல்படும் குளிரூட்டிகள் அமைக்கப்படுகின்றன.

இந்த விவகாரம் தொடர்பில் எஸ்பி குழுமத்தையும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தையும் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ தொடர்புகொண்டது.

புதிய குடியிருப்புக் கட்டடத்தில் நடைபெற்று வரும் குளிரூட்டி பொருத்தும் பணி சில வீடுகளில் இன்னும் நிறைவுபெறவில்லை என்று அந்த அமைப்புகள் கூறின.

ஆனால், எத்தனை வீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன என்ற விவரத்தை அவை தெரிவிக்கவில்லை.

இருப்பினும், குறிப்பிட்ட ஒரு புளோக்கில் குறைந்தபட்சம் ஏழு குடும்பங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அந்த செய்தித்தாள் அறிகிறது.

குறிப்புச் சொற்கள்