2019 அளவை எட்டும் தூரத்தில் பேருந்து, ரயில் பயண எண்ணிக்கை

2019 அளவை எட்டும் தூரத்தில் பேருந்து, ரயில் பயண எண்ணிக்கை

2 mins read
d4cf285e-bb3c-4122-9a93-ce62b60b6c67
2023 அக்டோபரில் பதிவான பயண எண்ணிக்கை 2019ஆம் ஆண்டின் எண்ணிக்கையில் 95 விழுக்காட்டைத் தொட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுப் போக்குவரத்தின் ஒட்டுமொத்தப் பயணங்கள் 2023ஆம் ஆண்டு தொடர்ந்து அதிகரித்தபோதிலும். பேருந்து மற்றும் ரயில்களில் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை இன்னும் கொவிட்-19க்கு முந்திய நிலையை எட்டவில்லை.

மத்திய வர்த்தக வட்டாரங்களுக்குச் செல்ல வாரநாள்களில் காலையில் மேற்கொள்ளப்படும் பொதுப் போக்குவரத்துப் பயணங்களின் எண்ணிக்கையும் கொவிட்-19க்கு முந்திய எண்ணிக்கையைவிடக் குறைவாகவே உள்ளது.

ஒட்டுமொத்தமாகக் கணக்கிடுகையில் பேருந்து, ரயில் பயணங்களின் எண்ணிக்கை கொவிட்-19க்கு முந்திய அளவைக் காட்டிலும் சற்று பின்தங்கி உள்ளது.

இதற்கிடையே, விரைவுச்சாலைப் போக்குவரத்தின் அளவு மட்டும் முழுஅளவில் மீளும் நிலையை நெருங்குகிறது. உச்சநேரங்களில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் அளவுக்கு அந்தப் போக்குவரத்து இருந்தது.

கொள்ளைநோய் அபாய காலத்துக்குப் பிறகு அலுவலகங்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையே இது உணர்த்துவதாக தொழில்துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.

2023 அக்டோபர் மாதம் பேருந்துகளிலும் ரயில்களிலும் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் சராசரி எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு பதிவான விகிதத்தில் ஏறக்குறைய 95 விழுக்காட்டைத் தொட்டது.

பேருந்துகளில் மட்டும் அன்றாடம் நடைபெற்ற பயணங்களின் சராசரி எண்ணிக்கை மெதுவான மீட்சி கண்டு, 2023 அக்டோபரில் கிட்டத்தட்ட 93 விழுக்காட்டை அடைந்தது.

அதேநேரம், ரயில்களில் நாள் முழுவதும் பதிவான பயணங்களின் சராசரி எண்ணிக்கை 2019ஆம் ஆண்டில் பதிவான எண்ணிக்கையில் ஏறக்குறைய 97 விழுக்காட்டைத் தொட்டது.

இந்த சராசரி விகிதங்களை நிலப் போக்குவரத்து ஆணையம் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளிடம் அளித்தது. இருப்பினும், பயணங்களின் எண்ணிக்கையை அது விவரிக்கவில்லை.

2019 அக்டோபர் மாதம் பேருந்துகளிலும் ரயில்களிலும் தினமும் சராசரியாக 7.81 மில்லியன் பயணங்கள் பதிவாகின. இதில், பேருந்துகளில் 4.17 மில்லியன், ரயில்களில் 3.64 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.

கொவிட்-19 கொள்ளைநோய் சிங்கப்பூரில் பரவத் தொடங்கிய ஒன்பதாவது மாதத்தில், அதாவது 2020 அக்டோபரில் பேருந்து, ரயில் பயணங்களின் எண்ணிக்கை 5.57 மில்லியனுக்குச் சரிந்தது.

2021 அக்டோபரில் இந்த எண்ணிக்கை மேலும் சரிந்து 4.63 மில்லியன் ஆனது.

குறிப்புச் சொற்கள்