சிங்கப்பூர் கரைக்கு அப்பால், கிட்டத்தட்ட 120 கிலோமீட்டர் தள்ளி கடலில் இருந்த உல்லாசக் கப்பலில் இருந்த சிப்பந்தி ஒருவரை சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை ஹெலிகாப்டர் ஒன்று டிசம்பர் 31ஆம் தேதியன்று மீட்டு அவரை சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது.
புத்தாண்டுக்கு முதல் நாள் காலை ஏறத்தாழ 11 மணிக்கு அவசர மருத்துவ தேவை உள்ள ஒருவரை மீட்க உதவும்படி ஆகாயப் படையின் தேடுதல், மீட்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்ததாக தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் தகவல் தெரிவித்தார்.
அவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அமைச்சின் பேச்சாளர் விளக்கினார்.
அந்த நோயாளியின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்த ஆகாயப் படையின் தேடுதல், மீட்புப் பிரிவு, அது 2023ஆம் ஆண்டின் வெற்றிகரமான 10வது மீட்பு சம்பவம் என்று தெரிவித்தது.
எனினும், நோயாளி தொடர்பான ரகசியம் காக்க வேண்டி உள்ளதால் மேல்விவரங்கள் தர இயலாது என அமைச்சு கூறியது.
இந்தச் சம்பவம் குறித்த படங்கள் குடியரசு ஆகாயப் படை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் கண்டன. அவற்றில் எச்225எம் ரக ஹெலிகாப்டர் ஒன்று புல்தரையில் தரையிறங்க, மருத்துவமனை ஊழியர்கள் அவரைப் படுக்க வைத்த நிலையில் தூக்கிச் செல்லக் காத்திருப்பது தெரிகிறது.