ஜிஎஸ்டி உயர்வுக்குமுன் அறைகலன் வாங்க விரைந்த மக்கள்

2 mins read
8305d2dc-91f6-4e8e-bb5a-719e28459931
ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு முன் விலை உயர்ந்த பொருள்களை வாங்க டிசம்பர் 28ஆம் தேதி உபியிலுள்ள கடை ஒன்றிற்கு விரைந்த மக்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

திரு கைருல் அசார், 33, மே மாதம்தான் தனது புதுவீட்டுக்குக் குடிபோக உள்ளார்.

ஆனால், அவர் சமையலறைக்குத் தேவையான பொருள்களை வாங்க டிசம்பர் மாதமே $8,000க்கு மேல் செலவழித்துவிட்டார்.

படைப்பாற்றல் துறையில் இணை இயக்குநராக பணிபுரியும் அவர், பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்வுக்கு முந்திய விலையிலேயே பொருள்களை வாங்க இதுவரை குறைந்தது மூன்று சில்லறை விற்பனைக் கடைகளுக்கு சென்றுள்ளார்.

ஆடியோ ஹவுஸ், பெஸ்ட் டெங்கி, ஹார்வி நோர்மன் ஆகியவையே அந்த மூன்று கடைகள்.

ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி 8லிருந்து 9 விழுக்காடாக உயர்வு காணும்.

ஜனவரி 1ஆம் தேதிக்கு முன் மேலும் $5,000 வரை தான் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க செலவிடக்கூடும் என்றும் திரு கைருல் கூறுகிறார்.

இவரைப் போலவே வேறு சில வாடிக்கையாளர்களும் வரி உயர்வை தவிர்க்கும் வண்ணம் பெரிய செலவிலான பொருள்களை டிசம்பர் மாதமே வாங்க எண்ணம் கொண்டனர்.

பொருள்களை விற்க இப்படியொரு வாய்ப்பு இருப்பதை அறிந்த பேரங்காடிக் கடைக்காரர்கள் முதல் அறைகலன் விற்கும் கடைக்காரர்கள் வரை ஜனவரி மாதத்திற்குள் வாடிக்கையாளர்களை ஈர்க்க ஆண்டிறுதி விற்பனை விழாவை நடத்த முனைந்தனர்.

அவற்றின் விளம்பரங்களில், வாடிக்கையாளர்களை குறிவைத்து ‘வரி உயர்வை தவிர்க்கவும்’ என்ற வாசகமும் அடங்கியிருந்தது.

திருவாட்டி சீ சு மிங், 55, நிர்வாகத் துறையில் பணிபுரிகிறார். இவரும் வேலையிலிருந்து ஒரு வாரம் விடுப்பு எடுத்து பல கடைகளுக்குச் சென்று ஒவ்வொரு கடையின் விலைப் பட்டியலையும் எடைபோட்டார்.

“பெரிய செலவு வைக்கும் பொருள்களுக்கு ஒரு விழுக்காடு வரி ஏற்றம் குறிப்பிடத்தக்க அளவில் விலையை ஏற்றலாம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்