சாலை விபத்துக்குப் பிறகு போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக ஆடவர் கைது

சாலை விபத்துக்குப் பிறகு போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக ஆடவர் கைது

1 mins read
cada6d17-84e4-4dd9-b537-1e8e692e9ad3
விபத்தில் ஒருவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன. - படம்: தமிழ் முரசு

ஜனவரி 1ஆம் தேதியன்று புக்கிட் தீமா விரைவுச்சாலையில் விபத்து நிகழ்ந்தது.

அந்த விபத்தை அடுத்து, போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

உட்லண்ட்ஸை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் மூன்று கார்கள் விபத்துக்குள்ளாகியதாக பிற்பகல் 12.55 மணி அளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.

விரைவுச்சாலையின் வலது பக்கத்தில் உள்ள இரு சாலைத் தடங்களில் சிவப்பு நிற மிட்ஷுபிஷி கார் அதிவேகமாகக் குறுக்கும் நெடுக்குமாகச் சென்றுகொண்டிருந்ததைக் காட்டும் காட்சி அதற்குப் பின்னால் சென்றுகொண்டிருந்த காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவானது.

ஆக வலதுப் பக்கத்தில் உள்ள தடத்தில் இருந்தபோது அந்த கார் பக்கத்து தடத்தில் சென்றுகொண்டிருந்த கார் மீது மோதியது. அந்த கார் அதற்கு இடது தடத்தில் சென்றுகொண்டிருந்த இன்னொரு கார் மீது மோதியது.

இடது தடத்தில் சென்றுகொண்டிருந்த அந்த மூன்றாவது கார் விரைவுச்சாலையின் ஓரத்தில் உள்ள சாலைத் தடுப்பு மீது மோதியது.

விபத்தை ஆரம்பித்து வைத்த சிவப்பு நிற கார், விரைவுச்சாலையின் நடுவில் உள்ள சாலைத் தடுப்பு மீது மோதியது.

விபத்தின் காரணமாக ஒருவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன. அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.

விபத்து குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்